Published:Updated:

தினமும் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிப்பு... அசத்தும் அரசு நிறுவனம்!

தினமும் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிப்பு... அசத்தும் அரசு நிறுவனம்!
தினமும் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிப்பு... அசத்தும் அரசு நிறுவனம்!

தினமும் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிப்பு... அசத்தும் அரசு நிறுவனம்!

தொழிற்சாலை கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பிரச்னையாக இருக்கும் அதே நேரத்தில் தொழில்சாலைகளால் தினமும் பூமியில் இருந்து உறிஞ்சப்படும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரால் நிலத்தடி நீராதாரமும் பாதிக்கப்படுகிறது. மேலைநாடுகளில் கழிவுநீரையே சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துகிறார்கள். பாலைவன தேசமான இஸ்ரேலில், கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துவதன் மூலம், விவசாயத்தில் உலகளவில் சாதனை செய்துகொண்டு இருக்கிறார்கள். நீர்தேவை அதிகமுள்ள நமது நாட்டிலும் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்தினால், தினமும் பலகோடி லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். தனியார் ஆலைகளே கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் ஈடுபாடு காட்டாத நிலையில், தமிழக அரசு நிறுவனம், கழிவுநீர் சுத்திகரிப்பு மூலமாக தினமும் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீரை சுத்திகரித்து பயன்படுத்துகிறது. 

தமிழ்நாடு கனிம நிறுவனத்துக்குச் சொந்தமான கிராபைட் ஆலை, சிவகங்கை மாவட்டம் கோமாளிபட்டியில் அமைந்துள்ளது. இங்கு பூமியில் இருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமத்தில் இருந்து கிராபைட் பிரித்தெடுக்கப்படுகிறது. தாதுவை அரைத்து, கிராபைட் பிரித்தெடுப்பதற்கு நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீரை ஆழ்துளை கிணறுகள் மூலமாக நிலத்தடி நீரில் இருந்து உறிஞ்சி எடுத்து பயன்படுத்தி வந்தார்கள். இந்நிலையில், இந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வள்ளலாரின் முன்முயற்சியால் காரைக்குடியில் உள்ள, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் (சிக்ரி)இணைந்து கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துகிறார்கள். இதனால், தினம்தோறும் பூமியில் இருந்து உறிஞ்சப்படும் மூன்று லட்சம் லிட்டர் நிலத்தடி நீர், தற்போது உறிஞ்சப்படாமல் சேமிக்கப்படுகிறது. இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண்மை இயக்குநர் வள்ளலார், ‘‘ தமிழக அரசுக்குச் சொந்தமான இந்த ஆலை, 1994-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு மிதவை முறையில் கனிமத்தில் இருந்து கிராபைட் பிரித்தெடுக்கப்படுகிறது. இதனால், ஆலை பயன்பாட்டுக்காக தினமும் மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படுகிறது. இந்த தண்ணீரை போர்வெல் மூலமாக உறிஞ்சி எடுத்து பயன்படுத்தி வந்த நிலையில், சமீபகாலமாக ஏற்பட்ட கடுமையான வறட்சியால் பல போர்வெல்களில் தண்ணீர் இல்லை. அந்த நேரத்தில் எங்கள் சுரங்கங்களில் சேகரமாகும் நீரை எடுத்து பயன்படுத்தினோம். நிலத்தடி நீர் அதளபாதாளத்துக்குச் சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளும் நீரில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா என காரைக்குடி சிக்ரியை அணுகினோம். அவர்களும் எங்கள் தொழிற்சாலைக்கு வந்து ஆய்வு நடத்தி, மிக குறைந்த செலவில், கழிவுநீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் ஆலையில், இருந்து வெளியாகும் கழிவுநீரால் அருகாமையிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக ஒரு பிரச்னையும் நீண்டகாலமாக இருந்து வந்தது. தற்போது, கழிவுநீரை சுத்திகரிப்பதால், தண்ணீர் வெளியே செல்வதில்லை. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. கழிவுநீர் சுத்திகரிப்புக்காக மூன்று லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிமென்ட் தொட்டியை கட்டியுள்ளோம். ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த தொட்டியில் சேகரிக்கப்படும். இங்கு அது சுத்திகரிக்கப்பட்டு மீண்டும், குழாய்கள் வழியாக ஆலை பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலமாக நிலத்தடி நீர் பயன்பாட்டை வெகுவாக குறைத்துள்ளோம். அருகாமை விவசாயிகளுக்கும் இதனால் நன்மை கிடைத்துள்ளது. இந்த ஒரு ஆலையில் மட்டும் நாளொன்றுக்கு மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. கடந்த இரண்டு மாத காலத்தில், கிட்டத்தட்ட ஒரு கோடி லிட்டர் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி இருக்கிறோம். இதனால் நாங்கள் வழக்கமாக நிலத்தடியில் இருந்து எடுக்கும் இதே அளவு நீர் சேமிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆலைகளும் கழிவுநீரை சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் தினமும் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை சேமிக்க முடியும். 

கிராபைட் பிரித்தெடுக்கும்போது கிடைக்கும் டன் கணக்கில் மண் கழிவு குவிந்துகொண்டே இருக்கும். இதுவும் எங்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்து வந்தது. இந்த மண்ணை அப்புறப்படுத்துவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் பணம் செலவாகி வந்த நிலையில், அந்த மண்ணை பயன்படுத்தி ‘பேவர் பிளாக்‘ எனும் நடைபாதைகளில் பதிக்கும் கற்கள் தயாரிப்பைத் தொடங்கினோம். இதனால், கழிவு பயன்பாட்டு பொருளாக மாறுவதுடன், சுற்றுவட்டார மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த மண் கழிவுகளில் கிராபைட் துகள்கள் இருப்பதால், இங்கு தயாராகும் பேவர் பிளாக் கற்கள் பலமானதாக இருக்கின்றன. சந்தைகளில் கிடைக்கும் கற்களை விட, அதிக வலுவான, தரமான கற்களை தயாரித்து சந்தைபடுத்துகிறோம். எங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு உறுதுணையாக இருந்து வருகிறது’’ என்றார்.

கழிவுநீரை சுத்திகரிப்பது தொடர்பாக பேசிய சிக்ரி இயக்குநர் விஜயமோகன், ‘‘ தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், சிவகங்கை கிராபைட் தொழிற்சாலையில் வெளியாகும் கழிவுநீரை மறுசுழற்சி செய்வது தொடர்பான ஆராய்ச்சியை எங்கள் மைய விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள். ஆய்வின் முடிவில் மிகவும் குறைந்த செலவில் கழிவுநீரை சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆலையில் கிராபைட் மிதவை முறையில் பிரிக்கும்போது, மிக நுண்ணிய கிராபைட் துகள்கள் (5 முதல் 6 மைக்ரான் அளவு) நீருடன் கலந்து வெளியேறுகின்றன. ஆலம் என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்தி நீரில் கலந்துள்ள நுண்ணிய துகள்களை அகற்றும் முறை இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறையில் சுத்திகரிக்கப்பட்ட நீரை மறுசுழற்சி செய்யும்போது, குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, அரிமான பிரச்னைகளால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கு மாற்றாக சிக்ரி விஞ்ஞானிகள் ஒரு தொழில்நுட்பத்தை கண்டறிந்து கொடுத்துள்ளார்கள். அந்த ஆய்வு முடிவின்படி, ஆக்சிஜன் ஏற்றம் தரும் வேதிப்பொருளை நுண்துகள்கள் கலந்த நீரில் கலக்கும்பொழுது, நுண்துகள்கள் அடிப்பகுதிக்கு சென்று விடுகின்றன. இதனடிப்படையில், ஆலையில் இருந்து வெளியாகும் கழிவுநீர், தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு அதில் ஆயிரம் லிட்டருக்கு 1.25 கிராம் என்ற அளவில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டு, கம்பரஸர் மூலமாக காற்று செலுத்தப்பட்டு கலக்கி விடப்படுகிறது. இந்த நீர் தெளிவதற்காக 24 மணி நேரம் விடப்படுகிறது. அதன் பிறகு தெளிந்த நீர், ஆலை பயன்பாட்டுக்காக எடுத்துச்செல்லப்படுகிறது. கழிவுநீரை சுத்திகரிக்கும் முறை, ஒவ்வொரு ஆலைக்கும், அதன் பயன்பாட்டை பொறுத்து வேறுபடும். ஆலைகளில் கழிவுநீரை சுத்திகரிக்க விரும்புபவர்கள் எங்கள் ஆராய்ச்சி மையத்தை அணுகலாம்‘‘ என்றார்.

கோக், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் ராட்சத போர்வெல்கள் மூலமாக நாள்தோறும் பல கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். கார் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு ஆலைகளிலும் அதிகளவு தண்ணீர் செலவழிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் நிலத்தடி நீர் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு, கழிவு நீரை சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால் ஏராளமான நிலத்தடி நீரை சேமிக்க முடியும். செய்வார்களா?  

- ஆர்.குமரேசன்,

படங்கள் : எஸ். சாய் தர்மராஜ்.

அடுத்த கட்டுரைக்கு