வெளியிடப்பட்ட நேரம்: 04:31 (17/03/2017)

கடைசி தொடர்பு:04:31 (17/03/2017)

 'தமிழக அரசு சொன்னாலும் ரேஷன் விநியோகம் சீராகாது':கொதிக்கிறார்கள் கூட்டுறவு ஊழியர்கள்!

                     ரேஷன்

மிழகம் முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது என்றும் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டாலும், ரேஷன் பொருட்கள் விநியோகம் சீராக வாய்ப்பில்லை என்கிறார்கள் அத்துறைச் சார்ந்த ஊழியர்கள்.

மத்திய அரசின் நேரடி மானியத்தில் இயங்கி வரும் பொதுவிநியோகத் திட்டம் என்பது மிக சாதாரண அடித்தட்டு ஏழை மக்கள் வாழ்வாதாரமாக இன்றும் இருக்கிறது. தமிழகத்தில் ரேஷன் விநியோகம் மூலம்  2 கோடி குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக ரேஷன் விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு பிறகு, அரசின் அனைத்துத் துறைகளிலும் நிலவிய மெத்தனம் உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறையிலும் இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் அல்லது நவம்பர் மாதத்துக்குள் அடுத்துவரும் ஆண்டுக்கான, ரேஷன் விநியோகத்துக்குத் தேவையான நிதிஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகளை, அரசு சார்பில் செய்யப்படும் என்பது தான் மரபாக இருந்து வந்தது. ஆனால் இது கடந்த ஆண்டு நடக்கவில்லை. இதனால் இப்போது தமிழக அளவில் ரேஷன் கடைகள் மூடப்படும் நிலையை அடைந்துள்ளது என்று கொதிக்கிறார்கள் ரேஷன் விநியோக நிலையை நன்கு அறிந்தவர்கள்.

ஆனால் இப்போதுதான் தமிழக அரசு, பருப்பு, பாமாயில் வகைகளுக்கு டெண்டர் கோரியுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவிக்கிறார். அண்மையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ்,"தமிழகத்தில் ரேஷன் விநியோகத்தில் குழப்பம் நடந்ததற்குக் காரணம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமே" என்று கூறியுள்ளார். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011ல் வழங்கிய 20 கிலோ இலவச அரிசி இப்போதும் எல்லா ரேஷன் கடைகளிலும் வழங்கப்படுகிறதா என்பதுகுறித்து அமைச்சர் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. மாநிலத்தின் பல இடங்களில் இலவச அரிசிக்குப் பதில் கோதுமை வழங்கப்படுகிறது. பல ரேஷன் கடைகளில் அதுவும் இல்லை. ஒரு நாளின் பெரும்பான்மையான நேரங்களில் ரேஷன் கடைகள் மூடப்பட்டே உள்ளன. கிராமப் பகுதிகளில் வாரத்தின் சில நாட்கள் மட்டும்தான் கடைகள் திறக்கப்படுகின்றன. பொருட்கள் அற்ற கடைகள் முன் கூடி வெறுத்துப்போன மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராகக் கண்டன அறிக்கைகள், ஆர்ப்பாட்டங்கள் என எதிர்ப்பைப் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். 

                     ரேஷன்

இந்நிலையில், தமிழக ரேஷன் கடைகளின் தற்போதைய நிலவரம் குறித்து, தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரித்தோம். அவர் கூறுகையில்,"சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சுற்றுப்பயணம் செய்து பார்த்துவிட்டேன். எல்லா மாவட்ட ரேஷன் கடைகளிலும் பொருட்கள் விநியோகம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. ஒரு சில இடங்களில் அரிசிக்கு மாற்று கோதுமை என்று விநியோகம் செய்கிறார்கள். குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் வெட்டுக்குத்து மட்டும்தான் நடக்கவில்லை. நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது. மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உணவுப்பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்த போது, தி.மு.க.ஆதரித்தது. அப்போது அ.தி.மு.க. எதிர்த்தது. ஆனால் இப்போது ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. அதே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு பகுதிதான் சர்க்கரை மானியம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது, மண்ணெண்ணெய் இல்லாமல் ஆக்கியது, ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் இரு கட்சிகளும் ரேஷன் விஷயத்தில் மக்களைக் குழப்பி ஏமாற்றுகின்றன. நியாயமாகப் பார்த்தால், தலைமைச் செயலகத்தையும் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்களையும் முற்றுகையிட வேண்டும். ரேஷன் கடைகள் முன்பு போராடினால் என்ன பலன் கிடைக்கும்." என்று கொந்தளித்தார்.

மேலும் தொடர்ந்த அவர், "ரேஷன் கடைகளை மத்திய அரசு மூடாமல் விடப் போவதில்லை என்கிற ரீதியில் இருக்கிறது நிலைமை. ஆனால் இதனை வெறும் மாநில அளவில் மட்டுமான அரசியலாக பார்ப்பது எந்த வகையிலும் தீர்வாக அமையாது" என்றார்.

- சி.தேவராஜன்        


டிரெண்டிங் @ விகடன்