வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (16/03/2017)

கடைசி தொடர்பு:17:17 (16/03/2017)

கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா

கோவாவில் காங்கிரஸின் மூத்த எம்.எல்.ஏ விஸ்வஜித் ரானே தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். மேலும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார். கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17 தொகுதிகளைக் கைப்பற்றியது. இருப்பினும் 13 தொகுதிகளை மட்டும் கைப்பற்றிய பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியது.

மனோகர் பாரிக்கர் முதல்வராகப் பதவியேற்றார். விஸ்வஜித் ரானே, கோவாவில் ஐந்து முறை முதல்வராக இருந்த பிரதாப் ரானேவின் மகனாவார். காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும் பட்சத்தில் விஸ்வஜித் முதல்வராகப் பதவியேற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன. அதன் காரணமாக மிகுந்த விரக்தியில் இருந்த அவர் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, வாக்கெடுப்பைப் புறக்கணித்தார்.

தற்போது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், கட்சியிலிருந்தும் விலகினார். இதுகுறித்து தெரிவித்த அவர், 'நான் ஏதேனும் ஒரு கட்சியில் சேரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒருபோதும் பிஜேபியில் சேர மாட்டேன். கோவாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் தவறிவிட்டது. காங்கிரஸ் தலைமை சரியில்லை' என்று கோவா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் திக்விஜய சிங்கைக் குற்றம் சாட்டினார்.