Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’இருக்கு... ஆர்.கே நகர்ல என்டர்டெய்ன்மென்ட் இருக்கு!’ - அ.இ.ம.க-வின் தீர்க்கம்

மாற்று அரசியலை உருவாக்கும் முனைப்போடு ஒரு கட்சி தொடங்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு அதற்கு முன்பு அவர்களது ஃபேஸ்புக் பக்கத்துக்குச் சென்று பார்த்தால் அ.தி.மு.க-வின் கொடியை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு, மேலே சிவப்பு கீழே கறுப்பு நிறத்தையும் நடுவில் இருக்கும் வெள்ளைப் பகுதியில் ஜெயலலிதா படத்தையும் வைத்து போட்டோஷாப் செய்திருந்தார்கள். அதுதான் அவர்களது கட்சிக் கொடியாம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் கிளம்பியிருப்பதால் என்ன ஏதென விசாரிக்கத் தொடர்பு கொண்டோம். பல முயற்சிகளுக்குப் பிறகு அந்தக் கட்சியின் நிறுவனர் சாலமோன் லைனுக்கு வந்தார். 

அ.இ.ம.க நிர்வாகிகள் - ஆர் கே நகர் இடைத்தேர்தல்

"ஜனவரி 24-ம் தேதி டெல்லிக்குப் போய் கட்சிக்கு முறையான அனுமதி பெற்றோம். கடந்த பிப்ரவரி 24 அம்மா பிறந்தநாள் அன்று தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தோம். மார்ச் எட்டாம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தோம்." 'சார்... அகில இந்திய மக்கள் கழகம்...' என நாம் முடிப்பதற்குள்தான் இப்படி ஒப்பித்தார் சாலமோன். 

''ஏற்கெனவே தமிழகத்தில் இவ்வளவு கட்சிகள் இருக்கும்போது நீங்களும் ஏங்க..?''

"எல்லாக் கட்சிகளும் அவங்கவங்களோட பொறுப்புகளை உணராம மக்களையும், மாணவர்களையும் தவறான வழியில் நடத்திக்கிட்டு இருக்காங்க. எம்.ஜி.ஆர் வழியில் அம்மா தொடங்கின அ.தி.மு.க ஒரு குடும்பத்தின் சூழ்ச்சியால் இப்போ சிதைஞ்சு போயிருக்கு. மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைச்ச அம்மாவோட உயிரைக் காப்பாத்தாம சுயநலத்தோட இருந்துட்டாங்க. இந்த அரசியல் சூழ்ச்சிகளுக்கு முடிவு கட்டி, அம்மா விட்டுட்டுப் போன பணிகளைச் செய்றதுக்காகத்தான் தனிக்கட்சி தொடங்கியிருக்கோம். மற்ற கட்சிகளை மாதிரி எங்களைத் தப்பா எடை போடாதீங்க."

''வேறு எந்தக் கட்சியிலும் உறுப்பினர்களாக இல்லாத நூறு பேர் உங்கள் கட்சியை வழி மொழிஞ்சுருக்கணுமே... உங்கள் கட்சியில் அவ்வளவு தொண்டர்கள் இருக்கிறார்களா..?''

"தேர்தல் ஆணையத்தோட சட்டதிட்டங்கள் எல்லாத்தையும் பூர்த்தி செஞ்சுதான் இந்தக் கட்சியைத் தொடங்கி இருக்கோம். தேர்தல் ஆணைய சட்டப்படி கட்சி தொடங்க 110 பேர் வேணும். (110 விதி ரெஃபரென்ஸ் போல..!) ஆனா நாங்க தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டத்தில் இருந்தும் 140 நபர்களின் கையெழுத்தைப் பெற்றுள்ளோம். அம்மாவோட நினைவிடத்துக்குப் போய் அம்மாவின் ஆசிபெற்றுத்தான் இந்தக் கட்சியை ஆரம்பிச்சிருக்கோம். "

''சசிகலா குடும்பத்தை நீங்களும் எதிர்க்கிறீர்கள்... ஓ.பி.எஸ்ஸும் எதிர்க்கிறார். தீபாவும் எதிர்க்கிறார்... அவர்களுடன் இணைந்து பணியாற்றலாமே..?''

"ஓ.பன்னீர்செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி. 75 நாட்கள் அம்மா மருத்துவமனையில் இருக்கும்போது சசிகலா குடும்பத்தினருக்கு அவர் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவரது பதவி பறிபோகும்போது, 'மருத்துவமனையில் அம்மாவை நான் பார்க்கவேயில்லை' என்கிறார். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? அவருடன் இப்போ தீபாவும் சேர்ந்திருக்கிறார். கட்சி தொடங்குறதுக்கு முன்னாடியே அவங்க கட்சியில் பல குழப்பங்கள் இருக்கு. அவங்களோட டிரைவருக்கே கட்சிக்குத் தலைமைப் பொறுப்பை கொடுத்திருக்காங்க. இவங்க எல்லோரும் சேர்ந்து மக்களைக் குழப்புறாங்க. அவங்க செய்றது எல்லாமே அம்மாவின் பெயரைச் சீர்குலைக்கிற முயற்சி. அவர்களோடு எப்போதும் நாங்கள் சேர மாட்டோம். அம்மா முடிக்காமல் விட்டுப்போன பணிகளை நாங்கள்தான் செய்வோம்."

அ.இ.ம.க - சாலமன் - ஆர் கே நகர்

''உங்கள் கட்சிக்கென கொள்கை, மக்கள் நலத் திட்டங்கள் வைத்திருக்கிறீர்களா..?''

"நாங்கள் அம்மாவின் கொள்கைப்படிதான் செயல்படுவோம். மக்கள் நலத் திட்டங்கள் தீட்டி வைத்திருக்கிறோம். தொண்டர்களுடன் கலந்து ஆலோசித்து எல்லா விபரங்களையும் விரைவில் வெளியிடுவோம். நாங்கள் போஸ்டர் ஒட்ட மாட்டோம்... மாநாடு நடத்தி பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த மாட்டோம். இதுவரை இருக்கும் அரசியல் கட்சிகள் மாதிரி இல்லாமல் உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்றதுக்காகத்தான் இந்தக் கட்சியை ஆரம்பித்திருக்கிறோம். உண்மையான தொண்டர்கள் இருக்கும் கட்சி எங்களுடையது."

அ.இ.ம.க கட்சிக் கொடி

''அப்போ, இதுவரை இருந்த எந்தக் கட்சியும் மக்களுக்குச் சேவை செய்யவில்லை. அப்படித்தானே?''

"அப்படி இல்லை. அம்மா இருந்தவரைக்கும் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால், அ.தி.மு.க-வும் பாரம்பர்யக் கட்சிகளைப் போல கூட்டம் கூட்டி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது. இது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. மக்களுக்குப் பிடிக்காத விஷயங்களில் இருந்து நாங்கள் விலகி நிற்போம்."

''ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா..?''

"வரப்போகும் ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் அகில இந்திய மக்கள் கழகம் நிச்சயமாகப் போட்டியிடும். எங்கள் கட்சியின் சார்பாக நான் இந்தத் தேர்தலில் நிற்கப்போறேன். எங்கள் பலத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரிந்து கொள்வீர்கள். (தெரிஞ்சுக்குவோம்... தெரிஞ்சுக்குவோம்..!) தேர்தலில் எந்தக் கட்சிகளோடும் கூட்டணி வைக்க மாட்டோம். தனித்துத்தான் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். எங்களுக்கு தமிழகம் முழுவதும் இரண்டு லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இன்னும் ஏராளமான மக்கள் அகில இந்திய மக்கள் கழகத்துக்கு ஆதரவு அளிப்பார்கள்."

கடைசிவரை சீரியஸாகவே பேசி முடித்தார் அ.இ.ம.க தலைவர் சாலமோன். 

 

- விக்கி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement