வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (18/03/2017)

கடைசி தொடர்பு:15:49 (18/03/2017)

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் பெண் அலுவலர் திடீர் மாற்றம்!

ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குநர் தி.நா.பத்மஜா தேவி திடீரென மாற்றப்பட்டுள்ளார். புதிய தேர்தல் நடத்தும் அதிகாரியாக பிரவின் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால் தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், அ.தி.மு.க மூன்றாக பிளவுபட்டு இந்தத் தேர்தலை சந்திக்கிறது. இடைத்தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் உள்ளார். வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், தேர்தல் அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

இதனையடுத்து, ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த பத்மஜா தேவி இன்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரவீன் நாயரை தேர்தல் நடத்தும் அலுவலராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது