வெளியிடப்பட்ட நேரம்: 10:36 (19/03/2017)

கடைசி தொடர்பு:12:27 (20/03/2017)

வீரலட்சுமியின் வீரமுழக்கம் என்ன தெரியுமா மக்களே? #SundaySarcasm #VikatanExclusive

அதிரடியாக இறங்கிய வீரலட்சுமி கொஞ்சநாளா அமைதியாவிட்டது மாதிரி இருக்கிறதே என்றால், ''அப்படியெல்லாம் இல்லை, தமிழர் முன்னேற்றப்படை எப்போதும் தமிழர்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. இடையில் எந்த ஊடக வெளிச்சமும் படாததனால அது வெளியில தெரியலைன்னு நினைக்கிறேன்.

ஜெயலலிதா  இறந்த மறுநாளே மரணத்தில மர்மம் இருக்கிறதுன்னு முகநூல்ல அறிக்கை விட்டோம். இப்போகூட ஆந்திராவுல தமிழர்களை கடத்தி வெச்சுருக்காங்கள்ல... அந்தப் பிரச்னைக்காக இன்னும் மூணு நாள்ல போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்''. அ.தி.மு.க. பிளவு, ஆர்.கே நகர் இடைத்தேர்தல் எனத் தமிழக அரசியலே பரபரப்பா இருக்கிற சூழலில் எந்த மாதிரியான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள தமிழர் முன்னேற்றப்படையின் நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமியைத் தொடர்புகொண்டால் இப்படித்தான் ஆரம்பிக்கிறார்.

வீரலட்சுமி

''தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறதே... தமிழர் முன்னேற்றப்படை அதைப் பயன்படுத்திக்கொள்ளுமா?''

''ஆரம்பத்தில இருந்தே தமிழர்தான் தமிழனை ஆளணுங்கிறது வீரலட்சுமியோட வீர முழக்கமா இருந்துச்சு. இப்போ ஆட்சி செய்கிற எடப்பாடி பழனிசாமியும் தமிழர்தான், நியமனப் பொதுசெயலாளர் சசிகலாவும் தமிழர்தான், ஆனாலும் இவங்ககிட்ட தமிழர்களோட மண்ணுரிமை, மொழி உரிமையை மீட்டெடுக்கக்கூடிய எந்தத் தமிழர் இனம் சார்ந்த கொள்கைகளும் அவங்ககிட்ட கிடையாது. எந்த அடிப்படை அரசியலும் தெரியாத, மக்களின் பிரச்னைக்காக குரல் கொடுக்காத சசிகலா, ஜெயலலிதாவுக்கு வீட்டு வேலை செஞ்சாங்க அப்படிங்கிற ஒரு காரணத்துக்காக மக்கள் அவங்களை ஏத்துக்கணும்னு நினைக்கிறதெல்லாம் தப்பு. கடந்த ஐம்பது ஆண்டு காலமா ஆட்சி செய்ற தி.மு.க., அ.தி.மு..க. கட்சிகள் மக்களுக்கான எந்த முழக்கத்தையையும் நேரடியா முழங்குவதற்குத் தயங்குறாங்க. உதாரணமா மாநில அரசுகள் இளைஞர்களுக்கு 95 சதவிகிதம் வேலைவாய்ப்பு  வரணும்னு சொல்லலை. இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழக மக்களோட வாழ்வாதாரத்துக்காக எந்தப் போராட்டமும் முன்னெடுக்காம அவங்களோட கட்சி நிதியை உயர்த்துறதுலயும், குடும்ப உறுப்பினர்களோட வாழ்வாதாரத்தை உயர்த்துறதுலயும்தான் குறிக்கோளா இருக்காங்க. என்னோட பதினெட்டு வயசுல இருந்து நான் அரசியல்ல இயங்கிக்கிட்டு இருக்கிறதுக்கான காரணமே லஞ்ச ஊழல், நிர்வாகத் திறமையற்ற இந்த ஆட்சியை அகற்றணும்னுதான்'' 

''சினிமாத் துறை மேல எப்போவும் உங்களுக்கு ஒரு கோபம் இருக்கே?''

''சினிமாத் துறைல இருக்கிறவங்க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதாலதானே தமிழர் உரிமைகளை எல்லாம் இழந்துக்கிட்டு இருக்கோம். திரும்பத் திரும்ப அங்கே இருந்து அரசியலுக்கு வரவிடக் கூடாதுன்னுதானே போராடிக்கிட்டு இருக்கோம், இன்னைக்கு தமிழ்நாட்டுல பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கு, இதுக்கு முழுக்க முழுக்க காரணம் சினிமாத் துறை. ஒருகாலத்துல இது கலைத்துறையா இருந்துச்சு. இப்போ இது கவர்ச்சித் துறையா மாறிடுச்சு. அந்த அளவுக்கு ஆடை விவகாரத்துல கட்டுப்பாடு இல்லாம இருக்கிறதாலதான் பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன, இது எல்லாத்தையும் அகற்றணும்னுகிறதும் எங்களோட குறிக்கோள்தான்.''

''மத்திய அரசோட செயல்பாடுகள் எப்படி இருக்கு?''

''தமிழகத்துல நடக்கிற அசாதாரணமான சூழலைச் சரி செய்ய வேண்டுமென நினைக்கிறது மத்திய அரசு. தமிழக மக்கள் மேல அக்கறையோடதான் செயல்படுறாங்கன்னு நினைக்கிறோம். தமிழகத்தோட பிரச்னைகளை மேலிடத்துக்கு சரியான முறையில் எடுத்துச்செல்ல தமிழநாட்டுல சரியான பா.ஜ.க. தலைவர்கள் அமையவில்லைன்னு தோணுது.''

வீரலட்சுமி

''ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்கிறேன்னு சொல்றீங்க, ஆனா மத்திய அரசு மக்களுக்கு ஆதரவா செயல்படுதுன்னு சொல்றீங்க?''

''மக்களோட போராட்டத்தின் விளைவாகத்தான் திரும்பப் பெற்றுக்கொள்வதா சொல்லிருக்காங்களே, எல்லாத்தையும் போராடித்தான் வாங்கணுமான்னு நீங்க கேட்கலாம். அதுக்குக் காரணம் நம்மளோட மாநில அரசு சரியில்லை. நம்மளோட பிரச்னைக்காக மாநில அரசு குரல் கொடுத்திருந்தா மத்திய அரசு கேட்டிருக்குமே, மாநில அரசுக்கு அவங்களோட ஊழல் பிரச்னைகள்ல இருந்து அவங்களைப் பாதுகாத்துக்கொள்றதுக்கே நேரம் சரியா இருக்கு,''

''மக்கள் நலக் கூட்டணி சிதறாமல் இருந்திருந்தா இந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தல் மாற்றம் நடக்க வாய்ப்பு இருந்துருக்குமா?''

''மக்கள் நலக் கூட்டணில இருந்து கடந்த எலெக்‌ஷன் முடிஞ்ச ரெண்டு மாசத்துலயே ஆதரவை விலக்கிக்கிட்டோம். போன தடவையே அந்தத் தொகுதில மக்கள நலக் கூட்டணி கம்மியான ஓட்டுதான் வாங்கினாங்க. இந்த எலெக்ஷன்ல மக்கள் நலக் கூட்டணி நின்னாலும் பெருசா எந்த மாற்றமும் நிகழப்போறது கிடையாது.''

''சரி, இந்த இடைத்தேர்தல்ல உங்க கட்சியோட நிலைப்பாடு என்ன?''

''போன எலெக்‌ஷன்லயே மக்களுக்காகக் குரல் கொடுத்து, கைதாகிப்போன என்னை மாதிரி இயக்கத்தலைவர்கள் தோற்றுப்போனதை எல்லாருமே பார்த்துருப்பீங்க. அப்படி இருக்கிற சூழல்ல இன்னைய தேதிக்கு பணநாயக ஆட்சியை வீழ்த்தி ஜனநாயக ஆட்சிய நிலைநாட்ட வேண்டியது எல்லோருடைய கடமை. ஆர்,கே. நகரைப் பொறுத்தவரைக்கும் ஜனநாயகா பணநாயகமாங்கிற கேள்விதான் மக்கள் முன்னால நிற்குது. தொகுதி மக்கள்தான் இதனை முடிவு செய்யணும். இந்த பினாமி ஆட்சிய அகற்றணும்னு நினைச்சு வாக்களிக்கணும்.''

''தி.மு.க. செயல்பாடுகள் பற்றி..?"

''எலெக்‌ஷன் முடிஞ்ச இந்த எட்டு மாசத்துல எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் சிறப்பா செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். சட்டசபையிலையும் சரி, மக்கள் மத்தியிலையும் சரி, மக்களோட உரிமையை மீட்டெடுக்கணும்னு போராடிக்கிட்டு இருக்கார். அதுக்காக அவரை ஆதரிக்கிறோம்னு அர்த்தம் இல்லை, அவரோட செயல்பாடுகள் மக்களுக்கு ஏற்றவகையில் இருக்கு, ஒருவேளை தி.மு.க-வில் இருந்து ஆதரவு கோரி அழைப்பு வந்தால், தமிழர் முன்னேற்றப்படை பொறுப்பிலிருப்பவர்கள் விவாதித்து முடிவு செய்வோம்.''

வீரலட்சுமி

''நடிகர் கமல்ஹாசன் கருத்துகள் பற்றி...''

''நடிகர் கமல்ஹாசன் நடித்த சமூக கருத்துகள் நிறைந்த ஒரு சில படங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இப்போது அவரும் அவர் மகளும் நடித்துவரும் படங்கள் தமிழகம், ஆந்திரா, கேரளாவில தடையின்றி ஓடணும் என்பதற்காகத் திராவிட அரசியல் பேசிவருகிறார். இந்திய தேசியமும் திராவிடமும் எதிர் எதிர் துருவங்கள். இரண்டுமே எப்போதும் ஒத்துப்போனது இல்லை. தேசிய சிந்தனை உள்ள கமல்ஹாசன், ஜெயலலிதாவின் இடத்தைப் பிடிக்கும் ஆசையில்தான் இது மாதிரி செய்கிறார் என நினைக்கிறோம். இதே திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில்தான் எனக்கு வாழ வழி இல்லை. நாட்டை விட்டே போகிறேன்னு சொன்னார், இப்போ தமிழ்நாட்டில் வாழ ஆசைப்பட்டு திராவிடத்தைப் புகழ்கிறார். இந்த திடீர் திராவிடப் பாசம் பற்றி கமலஹாசன்தான் விளக்க வேண்டும். இனி எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்ச்சமூகம் எத்தனை நூற்றாண்டு காலம் ஆனாலும் சினிமாக்காரார்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்காது. அது கமலாக இருந்தாலும் சரி, ரஜினிகாந்தும் கமலஹாசனும் கூட்டாக நின்றாலும் சரி, அது ஒரு போதும் நிகழ வாய்ப்பில்லை.''

''அரசியலுக்கு நீங்க வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள்?''

''அப்படி அரசியல் இல்லாம என்னால யோசிக்கக்கூட முடியலை, தமிழகத்துல மாற்றத்தை நிலைநாட்டணுங்கிற ஒரே குறிக்கோள்தான் எனக்கு இருந்துச்சு, அதுதான் என்னை அரசியலை நோக்கி உள்ளே இழுத்துச்சு. ஒருவேளை அரசியலுக்கு வராமல் போயிருந்தால் வழக்கறிஞராக ஆகி இருப்பேன்.''

அப்படியே ஆகியிருக்கலாம்..!

- ந.புஹாரி ராஜா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்