வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (20/03/2017)

கடைசி தொடர்பு:13:45 (20/03/2017)

“செத்தவனுக்கும் நிம்மதியில்லை... இதுதான் ஆர்.கே. நகரின் நிலை” பிரச்னைகளை அடுக்கும் வேட்பாளர்!

              ஆர்.கே.நகர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்று பெயர்தான் இருக்கிறது, ஆனால் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் அதிகாரிகள் மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கிறார்கள் என்று கொந்தளிக்கிறார் தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள மருது கணேஷ்.

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் தி.மு.க. சார்பில் வேட்பாளராகப் போட்டியிடுபவர் மருது கணேஷ். தொகுதி வாசியான மருதுகணேஷ், ஆர்.கே.நகர் மக்களின் எல்லா தேவைகளையும் பிரச்னைகளையும் நன்கு அறிந்துவைத்திருக்கிறார்.

தேர்தல் நடப்பது அடுத்த மாதம் 12-ம் தேதிதான் என்றாலும் இப்போதே வாக்காளர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் காதுகொடுத்து கேட்கிறார். அதோடு தமது கட்சிப் பிரதிநிதிகளையும் வீடு தேடிச் சென்று சந்திக்கிறார். பிரசார வியூகங்கள் குறித்து ஆலோசனைகள் கேட்கிறார். ஞாயிற்றுக் கிழமை என்றபோதிலும் மதியம் உச்சி வெயிலில் ஆர்.கே.நகரின் மையப்பகுதியான வைத்தியநாதன் பாலத்தருகே தமது ஆதரவாளர்களுடன் தேர்தல் நேர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் மருது கணேஷ். அவரை நமது விகடனுக்காக நேரில் சந்தித்து பேட்டி கேட்டோம்.சட்டென சம்மதித்தவர், கொளுத்தும் வெயிலிலும் தொகுதி மக்களின் குறைகளை மழையெனக் கொட்டினார் நம்மிடம்.

"அடித்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்றுதான் பெயர் இருக்கிறது. ஆனால் அவர் எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்பு என்ன குறைகள் இருந்தனவோ அவை இன்னமும் நிறைவேற்றப்படாமல் அப்படியே உள்ளன. குடிநீரை மக்கள் எல்லா காலத்திலும் அலைந்து திரிந்துதான் சேகரிக்க வேண்டியிருக்கு. குழாய்களில் அடிக்கடி கழிவுநீர் கலந்த தண்ணீர் வருகிறது. அதேபோல கழிவு நீர் பிரச்னை. எல்லாப் பகுதிகளிலும் பழைய பைப்புகள்தான் உள்ளன. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுக்கிறது. சேனியம்மன் கோயில் பகுதியிலும், சுனாமி குடியிருப்புப் பகுதியிலும் கழிவு நீர் அடைப்பு அடிக்கடி ஏற்படுகிறது.

அதேபோல தண்டையார்பேட்டை பாலத்துக்கு அந்தப்பக்கம் மக்கள் 'இடுகாடு' இல்லாமல் அவதிப்படுகிறார்கள். 40 ஆண்டுக்காலம் இந்த அவதி தொடருகிறது. ஐ.ஓ.சி. பேருந்து நிலையம் இதுவரை அமைக்கப்படவில்லை. வைத்தியநாதன் பாலம் தாண்டி வாழும் மக்கள், வங்கி வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். அதேபோல போலீஸ் ஸ்டேஷன் போதிய அளவுக்கு இல்லை. இப்படி நிறைய சிக்கல்கள் உடனடியாகத் தீர்க்கும் வகையில் இருக்கின்றன. ஆயுட்கால பிரச்னைகள் எதுவும் இல்லை. ஆனாலும் அதிகாரிகள் இவற்றைச் செய்வதில் மெத்தனமாக இருக்கிறார்கள். சி.எம்.தொகுதி என்பதால் ஒரு அதிகாரியை நியமித்து மக்களிடம் குறைதீர் மனுக்களை வாங்கினார்கள். பின்னர் அவற்றை மொத்தமாக மூட்டைகட்டி குப்பையில்தான் போட்டுள்ளார்கள். இந்தத் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றால் மக்களின் அடிப்படை பிரச்னைகளை  வேகமாகத் தீர்ப்பேன்" என்றார் உறுதியாக.    

                     ஆர்.கே.நகர் தி.மு.க வேட்பாளர்        

மேலும், தொடர்ந்த அவர், "முதியோர் பென்ஷன் வழங்குவதில் ஏராளமான முறைகேடுகள் நடக்கின்றன. வயதானவர்கள் என்றும் பாராமல் அவர்களை அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள். பண உதவி அவர்களுக்கு முறையாக வழங்கப்படுவதில்லை. ஆயிரக்கணக்கான முதியோர்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. கொடுங்கையூர் குப்பைமேட்டால் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதற்கு மாற்றுத் திட்டங்கள் கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதனை அடுத்து வந்த அ.தி.மு.க அரசு கிடப்பில் போட்டுள்ளது. பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் வெள்ள பாதிப்பு, கொசுக்கள் தொல்லை மக்களுக்கு நீடிக்கிறது.

அதேபோல நேரு நகர் ரயில்வே டிராக். இந்த ஆட்சியின் அலங்கோலத்துக்கு ஒரே உதாரணம் இதுதான். அங்கே எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்வதில்லை. எலக்ட்டிரிக் ரயில்கள் செல்வதில்லை. வெறும் கூட்ஸ் ரயில்கள் தான் செல்கின்றன. தண்டையார்பேட்டை யார்டில் இருந்து, வியாசர்பாடி யார்டுக்குச் செல்லும் கூட்ஸ் ரயில்கள் தான் நேரு நகர் வழியாகச் செல்கின்றன.

அந்த ரயில்கள் அனைத்தும் காலை 8 முதல் 9 மணிக்கும் மாலை 4 முதல் 5 மணிக்கும் செல்கின்றன. இது மாணவர்கள் பள்ளி சென்று, திரும்பும் நேரம். அதேபோல அலுவலகம் செல்வோரும் அதிகம் செல்லும் வழியாக நேரு நகர் இருக்கிறது. கூட்ஸ் ரயில்கள் இரவில் பத்துமணிக்கு மேலாகச் சென்று வந்தால் என்ன. அதனால் மக்கள் படும் அவதி குறையும் அல்லவா. ஆனால் இதில் இப்போதைய அரசு அக்கறை செலுத்தவில்லை. மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, ஆர்.கே.நகர் மக்களை விரோதமாகத்தான் பார்க்கிறது" என்று தெரிவித்தார் மருதுகணேஷ்.

- சி.தேவராஜன்  

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்               


டிரெண்டிங் @ விகடன்