வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (20/03/2017)

கடைசி தொடர்பு:14:53 (20/03/2017)

சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார் காரசார விவாதம்!

இந்திய மீனவர் பிரிட்ஜோவை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றது தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவை, இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றது. அவருடன் மீன் பிடிக்கச் சென்ற சரோன் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம், தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு கூடிய சட்டமன்றத்தில், பிரிட்ஜோ மரணம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது, 'தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பான ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறிச் செயல்படுகிறது. எனவே, கச்சத்தீவை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'கச்சத்தீவை யார் தாரை வார்த்தது' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தி.மு.க உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். பின்னர், இதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், '1974-ம் ஆண்டு அ.தி.மு.க - வின் முழு ஒத்துழைப்புடன் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார்.