சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - மார்ச் 23-ம் தேதி வாக்கெடுப்பு!

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது தி.மு.க கொண்டு வர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது, மார்ச் 23-ல் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பிப்ரவரி 18 -ம் தேதி நடைபெற்றது. அந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டப்பேரவையில் கலவரங்கள் ஏற்பட்டன. தி.மு.க உறுப்பினர்கள், வலுக்கட்டாயமாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதன்பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமி அரசு 122 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது. ஆனால், சபாநாயகர் தனபால் நடுநிலையாகச் செயல்படவில்லை என்று தி.மு.க குற்றம் சாட்டியது. மேலும், 'சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம்' என்றும் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 21- ம் தேதி, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்எல்ஏ-க்கள், சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீனிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கடிதத்தை அளித்தார். அதன்படி மார்ச் 23-ம் தேதி, சட்டப்பேரவையில் தி.மு.க கொண்டுவர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஒருவேளை, சபாநாயகர் தனபால் பெரும்பான்மையை நிரூபிக்காத பட்சத்தில், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சிக்கல் ஏற்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!