இரட்டை இலை யாருக்கு? தேர்தல் ஆணையம் இன்று முடிவு!

'இரட்டை இலை' சின்னம் பிரச்னையில், அ.தி.மு.க-வின் சசிகலா தரப்பு மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு ஆகிய இரு தரப்பிடமும் தேர்தல் ஆணைம் இன்று நேரில் விசாரணை நடத்த உள்ளது.

ADMK logo

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க, சசிகலா அணி, ஓ.பன்னிர்செல்வம் அணி, தீபா அணி என மூன்றாகப் பிரிந்தது. இதையடுத்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டது தொடர்பாக, பன்னீர்செல்வம்  ஆதரவு எம்பி-க்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இதுகுறித்து, சசிகலா அணி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. பிறகு, சசிகலா விளக்கத்துக்கு, பன்னீர்செல்வம் அணியும் தேர்தல் ஆணையத்துக்கு விளக்கமளித்தது.

இந்நிலையில், 'இரட்டை இலை' சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, பன்னீர்செல்வம் கடந்த வாரம் டெல்லி சென்று தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்தார். பின்னர், இரட்டை இலை சின்னம் தொடர்பாக விளக்கமளிக்க, சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, முதலில் 20-ம் தேதிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. ஆனால், தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால், பதிலளிக்க அவர்களுக்கு ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து. சசிகலா தரப்பு, தேர்தல் ஆணையத்தில் நேற்று விளக்கமளித்தது. அதில், 'பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு எங்களுக்குத்தான் உள்ளது. எனவே, எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும்' என்று சசிகலா தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து, இன்று சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரையும் தேர்தல் ஆணையம் நேரில் விசாரிக்க உள்ளது. அதன்படி, காலை 10 மணிக்கு இந்த விசாரணை துவங்குவதாக, பன்னீர்செல்வம் அணியின் மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, இன்று அல்லது நாளை இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்னையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!