தே.மு.தி.க., பா.ம.க., ச.ம.க... - இந்த அரசியல் கட்சிகளின் சமகால லடாய் வரலாறு தெரிஞ்சுக்கலாமா? | An article about the splits in tamil political parties

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (22/03/2017)

கடைசி தொடர்பு:16:30 (22/03/2017)

தே.மு.தி.க., பா.ம.க., ச.ம.க... - இந்த அரசியல் கட்சிகளின் சமகால லடாய் வரலாறு தெரிஞ்சுக்கலாமா?

ஆதித்யா, சிரிப்பொலி சேனல்களை எல்லாம் மிஞ்சிப்போய்க்கொண்டிருக்கிறது தமிழக அரசியல். குரூப்புல டூப்பு யாரு என சின்னம்மா கோஷ்டியும் ஓ.பி.எஸ் கோஷ்டியும் தள்ளுமுள்ளு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தீபாவும் அவரின் கணவரும். உலக வரலாற்றிலேயே ஆரம்பித்த ஒரே மாதத்தில் பிளவுபட்ட பார்ட்டி தீபா பேரவையாகத்தான் இருக்கும். இதுபோல கடந்த காலங்களில் நடந்த சில லடாய் பஞ்சாயத்துகளின் எஸ்.டி.டிதான் இது.

சரத் - எர்ணாவூர் நாராயணன் :

அரசியல்

முதலில் தி.மு.க, பின்னர் அ.தி.மு.க என சவாரி செய்த சரத்குமார், விஜயகாந்த் பாதிப்பில் தன் பங்குக்கும் தனிக்கட்சித் தொடங்கினார். அவரின் கட்சியில் அவருக்கு அடுத்தபடியாக மீடியாக்களில் தெரிந்த முகம் எர்ணாவூர் நாராயணன். 2011-ல் இருவருமே அ.தி.மு.க தயவில் எம்.எல்.ஏ-க்களானார்கள். அதன்பின் கருத்து மோதல் ஏற்பட, நல்ல நாள் பார்த்து நாராயணனை வெளியேற்றினார் சரத்குமார். கடுப்பான நாராயணன் தன் பங்குக்கும் ஒரு ச.ம.க-வைத் தொடங்கினார். தொடங்கிய சூட்டோடு அ.தி.மு.க-வோடு கூட்டணி என அறிவிக்க, அந்தப் பக்கம் முறைத்துக்கொண்டு வெளியேறிய சரத் திரும்ப அ.தி.மு.க-விடமே வர... கூத்து களைகட்டியது. இப்போது இரண்டு தரப்புமே சைலன்ட் மோடில் இருக்கிறது. வேற வழி...?

விஜயகாந்த் - சந்திரகுமார் :

அரசியல்

கேப்டன் எங்ககூடத்தான் வருவார், இல்ல அந்தப் பழம் எங்க டம்ளர் பால்லதான் விழும் என ஆளாளுக்கு கருத்துச் சொல்ல, கறுப்புத் துண்டைப் போட்டு லபக்கென இழுத்துப் போனார் வைகோ. சும்மாவே அண்ணியாரின் ஆதிக்கம் என சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இந்த முடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்தார்கள். இந்த அதிருப்தி அணிக்குத் தலைமை அதுவரை கேப்டனின் வலதுகரமாக இருந்த வி.சி சந்திரகுமார். மக்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தி.மு.க-வுக்கு ஆதரவெல்லாம் கொடுத்து சீட் வாங்கினார்கள். தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி வர, ஆட்டையைக் கலைத்துவிட்டு தி.மு.க-வில் ஐக்கியமாகி பதவியும் வாங்கினார் சந்திரகுமார். அவரோடு வெளியேறிவர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.

ராமதாஸ் - வேல்முருகன் :

அரசியல்

ராமதாஸின் தளபதியாக ஒருகாலத்தில் வலம் வந்தார் வேல்முருகன். பண்ருட்டியில் தொடர்ந்து இரண்டுமுறை ஜெயித்து கட்சியின் குட்புக்கில் இருந்தவருக்கு 2011-ல் நேரம் சரியில்லாமல் போனது. அதுநாள்வரை தி.மு.கவின் நெருக்கமாக இருந்தவர் அந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்க வலியுறுத்த, கட்சித் தலைமை மறுக்க, லடாய் உண்டானது. கொஞ்ச நாளிலேயே கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அதே சூட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கியவர் அ.தி.மு.க-வுக்காக லைக்காவை எதிர்த்து கம்பு சுற்றினார். இப்போது அ.தி.மு.க-வுக்கு உள்ளேயே நிறையப் பேர் கம்பு சுற்றுவதால் அன்னாரும் சைலன்ட் மோட்.

கார்த்திக் :

அரசியல்

நவரச நாயகன் கார்த்திக்கின் அரசியல் கிராஃப் அபாரமானது. படித்தாலே புல்லரிக்கும். 2006-ல் ஃபார்வர்ட் ப்ளாக் கட்சியில் சேர்ந்தவர் அந்தக் கட்சிக்காக பிரசாரம் எல்லாம் செய்தார். அதன்பின் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் கோபித்துக்கொண்டு கிளம்பியவர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். அதன்பின் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைத்து அவர்கள் சீட் தர மறுத்ததும் தனியே போட்டியிட்டார். பின்னர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலையில் காங்கிரஸில் சேர்ந்ததாகத் தகவல் வெளியானது. அதெல்லாம் இல்லவே இல்லை என மறுத்தார். இந்த அரசியல் சூழ்நிலையில் தன் பங்குக்கு ஏதாவது கலாட்டா செய்வார் என ஜாலியாக காத்திருக்கிறான் தமிழன்.

நித்திஷ்


டிரெண்டிங் @ விகடன்