ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சாலமன் வேட்புமனு நிராகரிப்பின் பின்னணி என்ன? பரபர தகவல்கள்! | This is Why Solomon Nomination papers rejected

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (25/03/2017)

கடைசி தொடர்பு:12:50 (25/03/2017)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சாலமன் வேட்புமனு நிராகரிப்பின் பின்னணி என்ன? பரபர தகவல்கள்!

                     ஆர்.கே.நகர்

த்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசிய சாலமனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் கூட்டுச் சதி இருக்கிறது என்று கூறப்படுகிறது. திட்டமிட்டே மனுவை நிராகரித்துள்ளார்கள் தேர்தல் அதிகாரிகள் என்ற புகாரும் எழுந்துள்ளது.

டி.டி.வி.தினகரன், தீபா உள்ளிட்டவர்களுக்கு பலமணி நேரம் கால அவகாசம் கொடுத்து அவர்கள் பூர்த்தி செய்து மிகவும் பொறுமையாக வேட்பு மனுக்களை அளிக்க அனுமதித்த தேர்தல் அதிகாரிகள், சாலமனின் வேட்பு மனுவை அளிக்க போதிய நேரம் தராமலும்,வேண்டுமென்றே தாமதப்படுத்தியும் மனுவைப் பெற்றுக்கொண்டு நிராகரித்துள்ளார்கள், என்று கொந்தளிக்கிறார் சாலமனின் சகோதரர் சந்தோஷ்.

இது தொடர்பாக நம்மிடம் தொடர்புகொண்டு பேசிய சந்தோஷ், "காரணமே இல்லாத காரணத்தைக் காட்டி வேட்புமனுவை நிராகரித்தார்கள் தேர்தல் அதிகாரிகள். அதாவது பூத் சிலிப்ல இருக்கும் விவரங்களைத்தான் நாங்கள் மனுவில் எழுதினோம். அது அனைத்தும் அரசால் கொடுக்கப்பட்ட விவரங்கள். 34 ல் இருக்கும் பாகம் 38க்கு மாறிட்டதாகக் கூறுகிறார்கள் அதிகாரிகள். ஆர்.கே.நகரில் உள்ள மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது அரசு அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். அவர்கள் அரசு கொடுத்த பூத் சிலிப்பை கொடுத்துதான் மனுவை பூர்த்தி செய்தோம். அதில் 8 பேர் முகவரி சரியாக இருக்கிறது. 2 பேரின் விவரங்கள் சரியாக இல்லை என்றார்கள் தேர்தல் அதிகாரிகள்.

'சார் நீங்க கொடுத்த பூத் சிலிப்பை வைத்துதான் நாங்கள் மனுவை பூர்த்தி செய்துள்ளோம். இப்போது அது சரி இல்லை என்றால் எப்படி 'என்று கேட்டோம். அதை சரிபார்ப்பது உங்கள் வேலைதானே என்றும் கூறினோம். அதெல்லாம் எங்கள் வேலை இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

அப்பவும் நாங்கள் சொன்னோம். தினகரனுக்கு 2 மணி நேரம் கொடுக்குறீங்க. தீபாவுக்கு 2 மணி நேரம் கொடுக்குறீங்க. ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகளைப் போலத்தான் சுயேட்சை வேட்பாளரையும் நடத்த வேண்டும் என்று கூறினோம். மேலும், நீங்க சொல்ற மனுக்கள் வைக்கல, உறுதிமொழி பத்திரம் வைக்கல என்று எதாவது விடுபட்டு இருக்கிறதா என்றும் கேட்டோம். அப்படி இருந்தால் நிராகரிப்பது சரி. ஆனால் உண்மைக்குப் புறம்பாக மனுவை நீங்க நிராகரிக்குறீங்க என்றும் முறையிட்டோம். அதையெல்லாம் தேர்தல் அதிகாரிகள் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.

                        ஆர்.கே.நகர்

திட்டமிட்டே சாலமன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. சேலம் சிறை தொடங்கி தாமதம் செய்தார்கள். திருவள்ளூர் தாலுக்கா ஆபீஸ்ல தாமதம் செய்தார்கள். இதையெல்லாம் தாண்டி மதியம் 2.53 மணிக்கு மனுதாக்கல் செய்தோம். எங்கள் மனு எண் 115. அதை அப்படியே தள்ளி தள்ளி வைத்தார்கள். எங்கள் மனுவைச் சரிபார்க்க ஆட்கள் யாருமே அங்கு இல்லை. சிறையில் இருக்கும் நபர் தேர்தலில் நிற்கலாமா என்று அங்கு இருந்த சில அதிகாரிகள் என்னைப் பார்த்துக் கேட்கிறார்கள். பொன்.ராதாகிருஷ்ணன் மேல செருப்பு வீசிய ஆள்தானே சாலமன். தேர்தலில் வேற நிக்குறீங்களா, என்று கேட்டார்கள். எங்களை நிராகரிப்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினார்கள். ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுவிட்டது." என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், "எங்களின் அமைப்பு இந்திய மக்கள் முன்னணி. நாங்கள் தீவிரவாத அமைப்பு இல்லை. ஏற்கெனவே பலமுறை தேர்தல்களை சந்தித்து இருக்கிறோம். போட்டியிட்டும் இருக்கிறோம். 2006முதல் 2016 வரை பல தேர்தலைச் சந்தித்து இருக்கிறோம். ஆனால் இந்த முறைதான் மனு நிராகரிப்பைச் சந்தித்து இருக்கிறோம். இதனை மக்களிடம் கொண்டுசெல்வோம்.ஆர்.கே.நகர் தேர்தலில் பிரசாரம் செய்வோம்." என்று கூறினார் கொதிப்பாக.

- சி.தேவராஜன்                            


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close