ஆர்.கே நகர் ரிசல்ட் - அன்றே சொல்லியிருக்கிறது தமிழ் சினிமா!

ஆர்.கே நகர் தொகுதி வரலாற்றுல இது 1578-வது இடைத்தேர்தல். இடைத்தேர்தல்ல ஓட்டுப்போட நின்னே முக்கால்வாசிப் பேரோட இடுப்பு எலும்பே உடைஞ்சு போயிருக்கும் இந்நேரம். எத்தனை தடவை எலெக்சன் நடந்தாலும் யார்தான் பாஸ் ஜெயிப்பாங்கன்னு ஒரு த்ரில் மக்கள் மத்தியில இருக்கு. இதோ இப்போ நடக்கிற இடைத்தேர்தல்லகூட `யாரோ ஜெயிக்கப் போறது யாரோன்னு` கலந்துகட்டி யோசிச்சுக்கிட்டு இருக்காங்க. சரி யார் ஜெயிக்கப் போறாங்கன்னு எலெக்சனுக்கு முன்னாடியே தெரிச்சிக்கணுமா? நம்ம தமிழ் சினிமாவிலேயே அதுக்கான பதில் இருக்கு. ஆமா மக்களே ஆர் கே நகர் எலெக்சன்ல என்ன நடக்கும்னு நம்ம கோலிவுட் எப்பவோ கணிச்சுடுச்சு. அப்படி நம்ம தமிழ் சினிமா என்னதான் சொல்லி இருக்குன்னு தெரிஞ்சிக்கணுமா..?இதைப் படிங்க.

ஆர்கே நகர்

* தாமரை மலரும், தாமரை மலர்ந்தே தீரும், பாலைவனத்துல பச்சைத் தண்ணி இல்லைனாகூட காவி கலர்ல தாமரை மலர்ந்தே தீரும்னு தீர்மானமா, தீர்க்கமா முடிவு பண்ணி இருக்காங்க நம்ம தமிழ்நாடு பா.ஜ.க-வும், தமிழிசை அக்காவும். அப்படி உண்மையாவே பா.ஜ.க. கட்சி ஜெயிக்க ஏதாவது வாய்ப்பு இருக்கான்னு யோசிச்சுப் பார்த்தா, தமிழ் சினிமாவிலேயே அதுக்கான பதிலையும் சொல்லி இருக்காங்க. ரொம்ப காலத்துக்கு முன்னாடி வந்த `சரஸ்வதி சபதம்` (ஜெய் நடிச்ச சரஸ்வதி சபதம் இல்லை பாஸ்) படத்துல கல்வியா, செல்வமா, வீரமான்னு போட்டி வெச்சு இருப்பாங்க. அதுல கடைசியா கல்விதான் பெஸ்ட்டுனு முடிவு பண்ணி படத்தை முடிச்சு இருப்பாங்க. இதுல கடைசியா ஜெயிக்கிறது சரஸ்வதி தேவிதான். சரஸ்வதியோட இருக்கை தாமரை.1966-ல் வந்த 'சரஸ்வதி சபதம்' படத்துலயே தாமரைதான் ஜெயிக்கும்னு சொல்லிட்டதால இந்த எலெக்சன்லயும் தாமரைதான் ஜெயிக்கும். ஆனா வரலாற்றுப்படி தமிழ்நாட்டுல ஒருதடவைகூட தாமரை மலர்ந்தது இல்லைங்கிறதால இந்தக் கணிப்பு தவறாகவும் இருக்கலாம். ஆகவே நம்ம அடுத்த கணிப்பைப் பார்க்கலாம்.

ஆர்கே நகர்

* இதே மாதிரி முன்னொரு காலத்துல வந்த படம்தான் 'சூரியகாந்தி'. அந்தப் படத்துல நடிச்சு இருந்த ஜெயலலிதா பேசுற ஒரு நீளமான டயலாக்ல `சூரியன் உதிக்கும்`னு சொல்லி இருப்பாங்க. அதுக்கு அப்புறம் அவங்களே சூரியனை எதிர்த்து இருந்தாலும் ஒரு காலத்துல சூரியனுக்கு ஆதரவா பேசி இருக்கிறதால ஆர்.கே நகர்ல கண்டிப்பா தி.மு.க-தான் பாஸ் ஜெயிக்கும்னு சொல்லலாம். ஏற்கெனவே சூரியன் பலமா இருக்கிருதாலேயும், இப்ப ஆர்.கே நகர்ல சூரியனோட ஆதிக்கமும், வெயிலும் அதிகமா இருக்கிறதால கண்டிப்பா அங்கே சூரியன் ஜெயிக்கும்னு சொல்லலாம். ஆனாலும் நம்ம தமிழ் சினிமா இவங்க ஜெயிக்க மாட்டாங்க வேற ஒருத்தங்கதான் ஜெயிப்பாங்கன்னு கணிச்சு இருக்கு. அது யார்னு நீங்களே பாருங்க.

ஆர் கே நகர்

* தமிழ் சினிமாவை நல்லா கவனிச்சு இருந்தீங்கன்னா அதுல முக்கால்வாசி நேரம் தொப்பி போட்டு இருக்கிறவங்கதான் ஜெயிச்சு இருப்பாங்க. சூப்பர் ஹிட் ஆன 'சுறா' படத்துல கூட ஒரு சீன்ல விஜய் தொப்பி போட்டு இருப்பார். அவர்கிட்ட அடி வாங்குற யாருமே தொப்பி போட்டு இருக்க மாட்டாங்க. அவங்க தொப்பி போடாம இருக்கிறதாலதான் ஜெயிக்கலை. விஜய் தொப்பி போட்டு இருந்ததாலதான் ஜெயிச்சார்னு பல பேருக்குத் தெரியலை. ஆகவே தொப்பி போட்டு இருக்கிற பல பேர் ஈசியா ஜெயிச்சிடுவாங்கன்னு தமிழ் சினிமா சொல்றதால, தொப்பி போட்டு இருக்கிற தினகரனும் ஈசியா ஜெயிக்க வாய்ப்பு இருக்கு. ஆனாலும் அப்படி ஈசியா முடிவு பண்ண இது என்ன கிரிக்கெட் மேட்ச்சா, ரத்த பூமி. ஏன்னா தமிழ் சினிமாவில பல காமெடியில் காமெடியன்கள் தொப்பி போட்டுக்கிட்டுதான் அடி வாங்கி இருக்காங்க. ஆகவே அவருக்கு ரிசல்ட் ஆப்போசிட்டாகூட வரலாம். ஆகவே அடுத்த கணிப்பு எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.

ஆர் கே நகர்

* அடுத்த சின்னம்தான் அதி முக்கியமான சின்னம். வேறென்ன நம்ம தீபா அக்காவோட படகு சின்னம்தான் அது. தமிழ் சினிமாவில சில காலத்துக்கு முன்னாடி `கிரி`ன்னு அர்ஜூன் நடிச்ச படம் வெளியானது. அதுல படகு போட்டி நடக்கும். அந்தப் படகு போட்டியில யார் ஜெயிக்கிறாங்களோ அவங்க பக்கம்தான் தீர்ப்பு போகுமுன்னு கதைவிட்டு இருப்பாங்க. இந்தக் கதையை மறந்துட்டு அதுல உள்ள ஒரு தத்துவத்தை யோசிச்சுப் பார்க்கணும் மக்களே. அதில் யார் ஜெயிச்சாலும் கண்டிப்பா ஏதாவது ஒரு படகுதான் ஜெயிக்கும். ஆகவே ஆர்.கே நகர்லேயும் படகுதான் ஜெயிக்கும். ஆனா அந்தப் போட்டியில யார் தோற்றாலும் படகுதான் தோற்கும். ஆகவே ஆர்.கே நகர்லேயும் படகு தோற்கும்னு சொல்லலாம் என்பதால் இந்த கணிப்பை இத்தோட முடிச்சுக்கிறோம்.

ஆர் கே நகர்

இவ்வளவு பேரும் ஜெயிக்க பிரகாசமான வாய்ப்பு இருந்தும் இன்னொருத்தர்தான் இந்தக் கணிப்புக்கு கரைக்ட்டா இருக்கார். இந்த மாசம்தான் நடிகர் ஆர்.கே நடிச்ச `வைகை எக்ஸ்பிரஸ்` படம் ரிலீஸ் ஆனது. இதே மாசத்துலதான் ஆர்.கே நகர்ல எலெக்சனும் நடக்கப் போகுது. ஆகவே எலெக்சன்ல ஆர்.கே ஜெயிக்க பிரகாசமான வாய்ப்பு இருக்குனு சொல்லலாம். ஆனா இவ்வளவு வெற்றி வாய்ப்பு இருக்கிற ஆர்.கே ஏனோ ஆர்.கே நகர் எலெக்சன்ல நிற்கலைன்னு நினைக்கிறப்பதான் மனசு மார்க்கமா ஃபீல் ஆகுது மக்களே.!

-லோ.சியாம் சுந்தர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!