வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (31/03/2017)

கடைசி தொடர்பு:17:59 (31/03/2017)

சோனியாவை விமர்சித்த ஹெச்.ராஜாவை கைது செய்! கொந்தளிக்கும் காங்கிரஸ்

               ஹெச்.ராஜா

த்திரிகையாளர் ஒருவரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் அவரை தேசத் துரோகி என்று வெளிப்படையாகக் கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா. மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இழிவாகப் பேசிய ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி தமிழகம் முழுக்க காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.   

இரண்டு நாட்களுக்கு முன்பு, பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஹெச்.ராஜா. அப்போது அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். தமிழக ஊடகங்கள் பிரதமர் மோடியைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் நிகழ்ச்சிகள் நடத்துகின்றன என்றும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்களா என்றும் தனது பதிலில் குற்றம் சாட்டினார். மேலும் தொடர்ந்து கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவரை நீங்க தேசத்துரோகி என்று பகிரங்கமாக தெரிவித்தார். இது பத்திரிகையாளர்கள் மத்தியிலும், காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஹெச்.ராஜாவின் கட்டுப்பாடற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும்,சோனியா காந்தியை இழிவாகப் பேசியதற்கு அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும் சென்னையில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணாநகர் பகுதியில் மத்திய சென்னை காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில், ஹெச்.ராஜாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ஹெச்.ராஜாவின் உருவ பொம்மையும் கொளுத்தப்பட்டது. இதனால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு அயனாவரம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் ஒன்றில் அடைத்துவைக்கப்பட்டனர். 

                     ஹெச்.ராஜா

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம் , "எங்கள் தலைவர் சோனியா காந்தியை கேவலமாகப் பேசியுள்ளார் ஹெச்.ராஜா. அதனால் அவரை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்தினோம். ராஜா தனது நாவை அடக்க வேண்டும். இல்லையென்றால் அவர் தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் அவரைத் தேடித் தேடி வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம். அவரைக் கைது செய்ய வேண்டும். அது வரை எங்கள் போராட்டம் தொடர்ந்து நடக்கும்" என்று கொந்தளித்தார்.

இதே போல நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராஜாவின் உருவப்படத்துக்கு முன்பு ஒப்பாரி வைத்தும், கண்டன முழக்கங்கள் எழுப்பியும் காங்கிரஸ் கட்சியினர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

                   ஹெச்.ராஜா

- சி.தேவராஜன்.

     


டிரெண்டிங் @ விகடன்