வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (01/04/2017)

கடைசி தொடர்பு:11:30 (01/04/2017)

ஆர்.கே.நகரில், காமாட்சி விளக்கு விநியோகம்; டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் மூன்று பேர் சிக்கினர்

R.K.Nagar arrested

ஆர்.கே.நகர்த் தொகுதியில், காமாட்சிவிளக்கை விநியோகம்செய்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அவருடைய தொகுதியான ஆர்.கே.நகருக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்கலும் வேட்பு மனுப் பரிசீலனையும் நிறைவடைந்த நிலையில், வாக்கு சேகரிப்பு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. ஓட்டு சேகரிப்பு நடந்துவரும் நிலையில், ஓட்டுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதாக துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், ஆர்.கே.நகர்த் தொகுதியில் 40-வது வார்டில் காமாட்சி விளக்கு வழங்கிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை, சிவகுமார் என்பவருடன் மேலும் இரண்டு பேர் சேர்ந்து, வீடு வீடாகச் சென்று காமாட்சி விளக்கை விநியோகம் செய்துள்ளனர். அவர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கைதான மூன்று பேரும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே, நேற்று ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாக கருணாமூர்த்தி என்பவர் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார். அவரும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.