'கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு முதல் காசிமேடு துறைமுகம் வரை' - மார்க்ஸிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை

marxist communist manifesto

கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு அகற்றப்பட்டு சிறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு அகற்றப்பட்டு தொழில் நிலையங்கள் அமைக்கப்படும். காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கழிவறை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அமைக்கப்படும். மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் வகையில் ஏற்றுமதி வளாகம் அமைக்கப்படும். மாநகராட்சி பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏற்கெனவே உள்ள அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையை வெளியிட்ட பின் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், 'தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தன. மக்கள் நலத் திட்டங்கள் ஏதும் செய்யவில்லை என்று மக்கள் எங்களிடம் கூறுகின்றனர். அதனால் மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளது. தி.மு.க, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குகின்றனர். தேர்தல் அலுவலர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் தெரிவித்தார். இந்த அறிக்கை வெளியீட்டின்போது, மாநிலங்களவை எம்.பி டி.கே.ரங்கராஜன், தொகுதி வேட்பாளர் லோகநாதன் உள்ளிட்டோர் இருந்தனர்.

- எஸ்.கிருபாகரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!