வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (02/04/2017)

கடைசி தொடர்பு:11:56 (04/04/2017)

ஜல்லிக்கட்டு காளையுடன் ஆர்.கே.நகரில் வலம் வந்த மதுசூதனன்!!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதனன் ஜல்லிக்கட்டு காளையுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஜெயலலிதா மறைந்ததையடுத்து அவருடைய தொகுதியான ஆர்.கே.நகருக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் மற்றும் வேட்புமனு பரிசீலனைகள் நிறைவடைந்த நிலையில் தீவிர வாக்குச் சேகரிப்பு நடைபெற்று வருகிறது.

 

மதுசூதனன்

தி.மு.கவைச் சேர்ந்த மருது கணேஷ், டி.டி.வி.தினகரன், மதுசூதனன், தீபா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். இரட்டை இலை முடக்கப்பட்ட நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னமும், மதுசூதனனுக்கு மின்கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே டி.டி.வி.தினகரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தலையில் தொப்பி அணிந்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தினகரனின் எதிர் அணியான பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த வேட்பாளர் மதுசூதனன் இன்று ஜல்லிக்கட்டு காளையுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

40 வது வட்டத்தின் ஏ.இ.கோயில் தெருப் பகுதியிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அவர், வ.வு.சி.நகர், கார்பரேஷன் காலனி, டி.எச்.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் செல்லும் வழியில் ஜெயலலிதா பேரவையின் சார்பில் ரோஜா பூ இதழ்களைத் தூவி வரவேற்பு அளித்தனர். அவர் ஜல்லிக்கட்டுடன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டது பொதுமக்களை கவரும் வகையில் இருந்தது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற சமயத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை அவருடைய ஆதரவாளர்கள் ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைத்தது குறிப்பிட்டத்தக்கது.

- ந.பா.சேதுராமன்