வெளியிடப்பட்ட நேரம்: 03:55 (03/04/2017)

கடைசி தொடர்பு:03:55 (03/04/2017)

ஓட்டுக்காக டி.டி.வி.தினகரன் அள்ளிவிடும் வாக்குறுதிகள்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் ராஜிபுரம் ‘ஏ’ பிளாக் பவர் குப்பம், எஸ்.என்.செட்டி தெரு, மெயின் தெரு, புஜி காலனி, எம்.ஜி.ஆர் நகர், எஸ்.என். செட்டி தெரு, எம்.ஜி.ஆர். நகர், திருவள்ளூர் நகர் ஆகிய இடங்களில் அ.தி.மு.க அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் பேசினார்.

தினகரன்


"ஆர்.கே.நகர் தொகுதி அம்மாவின் அசைக்க முடியாத கோட்டை. அம்மாவின் தொகுதியிலேயே இன்றைக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இதை, நான் வாழ்க்கையில் என்றைக்கும் நினைத்துப் பார்த்ததில்லை. என்னை முதன் முதலாக அம்மா நேரடி அரசியலுக்கு கொண்டு வந்து பெரியகுளம் பாராளுமன்ற வேட்பாளராக நிறுத்தினார். அன்றைக்கு அம்மா ஆசியோடு வெற்றி பெற்றேன். அம்மாவுக்கு உதவியாளராக, பாதுகாவலனாக நான் 3 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன்.  அம்மா இத்தொகுதியை இந்திய துணைக் கண்டத்திலே முன்மாதிரி தொகுதியாக உருவாக்கிக் காட்டுவேன் என்று 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதலமைச்சரான பிறகு இங்கே வந்து சொல்லியது நினைவிருக்கிறது.  


அம்மா என்னென்ன திட்டங்களை இத்தொகுதிக்கு வகுத்து வைத்திருந்தார்களோ, அதை பூர்த்தி செய்து இந்தியாவிலேயே முன்மாதிரி தொகுதியாக இத்தொகுதியை மாற்றிக் காட்டுவேன். அம்மா என்ன கனவு கண்டார்களோ அந்த கனவுகளை நிறைவேற்றுவேன்.  ஆண்டிப்பட்டி தொகுதியை அரசப்பட்டி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று அம்மா அப்போது சூளுரைத்தார். அதன்படி அம்மா ஆண்டிப்பட்டி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி தேனி மாவட்டத்திற்கு மருத்துவமனைகள், அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள் உருவாக்கி அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்தார். 


அதேபோன்று இன்றைக்கு ஆர்.கே.நகர் தொகுதியிலும் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி இந்தியாவிலேயே ஆர்.கே.நகர் தொகுதியை மாற்றிக்காட்டுவேன். எதிரிகளையும், துரோகிகளையும் இந்த பக்கமே வரவிடாமல் செய்வேன். ஆர்.கே.நகர் தொகுதியில் அம்மா சொன்னபடி அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவேன். அம்மாவிடம் வீடுகட்டித்தரவேண்டும் என்ற கோரிக்கை வைத்த 57 ஆயிரம் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு முதல் வேலையாக 57 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படும்.  2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இதே ஆர்.கே. நகர் தொகுதியில் நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன். அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய பிறகு தான் வாக்கு கேட்க வருவேன்'' என்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வாக்கு சேகரித்தார். 

- எஸ்.முத்துகிருஷ்ணன் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்