ஆர்.கே நகர்ல கிடைக்கப் போறது ஞானப்பழமா வாழைப்பழமா? - வேட்பாளர்கள் பல்ஸ் இதுதான்!

ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க அம்மா அணியில் இருந்து, புரட்சித் தலைவி அம்மா அணி, கின்னஸ் சாதனை சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வரைக்கும் ஒவ்வொருவரும் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உழைக்கப் போவதாக ஆளாளுக்கு உதார் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு வேறுவிதமான நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. உண்மையில் இவர்கள் என்னென்ன குறிக்கோளை நிறைவேற்ற இந்தத் தேர்தலில் களம் இறங்குகிறார்கள்? மக்கள் நலன் எனச் சொன்னால் மக்களே சிரிப்பார்கள். பார்க்கலாம் வாங்க...

தீபா - தினகரன்

டி.டி.வி.தினகரன் :

ஜெயலலிதா 'ஆண்டிபட்டியை அரசம்பட்டியாக்குவேன்' என வாக்குறுதி அளித்ததைப் போல 'ஆர்.கே. நகரைச் சிங்கப்பூர் ஆக்குவேன்' என வாக்குறுதியை அள்ளிவிட்டு வாக்குச் சேகரித்து வருகிறார் டி.டி.வி.தினகரன். காசு பணத்தை வாரியிறைத்து ஓட்டு வேட்டையாடக் காத்திருக்கும் இவர் தேர்தலில் வென்ற பிறகு விட்டதையெல்லாம் வட்டியும் முதலுமாகப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தினகரன் வென்றால் யாருக்குக் கஷ்டமோ இல்லையோ எடப்பாடி பழனிசாமிக்கு உதறல் எடுக்கும். அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்குக் குறிவைத்துதான் தினகரன் இந்தத் தேர்தலைப் பயன்படுத்துகிறார் என்பது ஆர்.கே.நகரில் பிறந்த பச்சைக் குழந்தைக்கும் தெரியும். தினகரனின் உண்மையான வாக்குறுதி ஜெயித்தால் முதல்வர் ஆவேன் என்பதுதான். 

ஜெ.தீபா : 

இந்தத் தேர்தலில் வென்றால் மக்களுக்காக உருண்டு புரண்டு பாடுபடுவேன் என முழங்கிக் கொண்டிருக்கும் தீபாவுக்கு இது முதல் தேர்தல். இந்தத் தேர்தலில் சொல்லிக்கொள்ளும்படியான வாக்குகளைப் பெற்றால் மட்டுமே அடுத்த தேர்தல் வரை அரசியல் ஆட்டத்தில் இருக்க முடியும். இல்லையெனில் ஓங்கி அடித்த ரேடியம் பந்து போல தொலைதூரத்தில் விழுந்து தொலைந்து போவார். ஆக, இது அவருக்கு அக்னிப் பரீட்சை. அடுத்த வருட சம்மர் ஹாலிடேவிலும் பால்கனியில் நின்று தொண்டர்களுக்குக் கையசைக்க வேண்டுமெனில் இந்தத் தேர்தல் முடிவுகள் திருப்திகரமாக இருக்க வேண்டியது அவசியம். 

கங்கை அமரன் : 

வெற்றி பெற்று ஆர் கே  நகர் தொகுதி மக்களுக்கு மக்கள் நலத் திட்டங்களை மல்லாக்கப் படுக்கப்போட்டுத் தீட்டுகிறாரோ இல்லையோ, வெற்றி பெற்றுப் பதவியேற்றதும் செய்யும் கடமை ஒன்று பாக்கி இருக்கிறது. அது, கங்கை அமரனுக்குள் கனன்றுகொண்டிருந்த அரசியல் தீயை மூட்டிய அந்தச் சம்பவம்தான். தன் நிலத்தை சசிகலா குடும்பத்தினர் மிரட்டி அபகரித்ததாகச் சொல்லித்தான் சில மாதங்களுக்கு முன்பு சசிகலா குடும்பத்துக்கு எதிராகக் கொந்தளித்தார். சசிகலா சிறைக்குப் போனபிறகு, அவரது அக்கா மகன் டி.டி.வி. தினகரன் இடைத்தேர்தலில் நிற்க, மொத்தப் பகையையும் தீர்க்க, அவரோடு நேருக்கு நேராக மோதக் களம் இறங்கிவிட்டார். 

"வாக்குறுதி கொடுத்தவர்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தில் லாரி லாரியாகத் தண்ணீர் வழங்க முடியும். ஆனால், கொடுப்பதற்கு அவர்களிடம் மனது இல்லை. கலைத்துறையில் பிரபலமாக இருக்கும் எங்கள் குடும்பத்து சொத்தையே மிரட்டி வாங்கிய இவர்கள் சாமானிய மக்களை என்ன பாடு படுத்துவார்கள்..?" எனப் பேசி ஓட்டுக் கேட்டு வருகிறார் கங்கை அமரன். மக்களுக்குச் செய்வதாகச் சொல்லும் திட்டங்களுக்கு இடையிடையே சசிகலா குடும்பத்தினரைத்தான் கிழி கிழியெனக் கிழிக்கிறார். ஆக, இவருக்கு நினைப்பு பூராம் சொம்பு மேலயேதான். சசிகலா குடும்பத்தை எதிர்த்துச் செயல்படுவேன் என்பதுதான் இவரது உண்மையான குறிக்கோள். 

மதுசூதனன் - கங்கை அமரன் - ஆர் கே நகர்

மதுசூதனன் : 

அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியின் சார்பில் களம் இறங்கும் மதுசூதனன் ஏற்கெனவே ஆர் கே நகர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டார் என்பதும் மோசமான எஸ்.டி.டி. ஜெயலலிதாவின் அ.தி.மு.க-வுக்கு அடுத்த உண்மையான வாரிசுக் கட்சி தாங்கள்தான் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. ஓ.பி.எஸ்ஸின் தியான அரசியல் காய்நகர்த்தல்களுக்கு இந்த ரிசல்ட்தான் 'கொட்டு விழுமா... ஹிட் அடிக்குமா' என்பதைச் சொல்லப் போகிறது.

என்ன வாக்குறுதி கொடுத்தாவது மக்கள் மனதைக் கவரத்தான் அனைத்து வேட்பாளர்களும் மும்முரமாய்க் களப்பணி ஆற்றி வருகிறார்கள். மக்களைப் பார்த்து அரசியல்வாதிகள் எல்லோரும் பயப்படுகிற தேர்தல் இது. ஒவ்வொரு கட்சிக்கும் ஏதோவொரு வகையில் தன் பலத்தை நிரூபிக்கிற தேர்தல். பிரேக் ஃபாஸ்டுக்கு டி.வி விவாதத்துக்குக் கிளம்பி டின்னர் முடிந்த பின்புதான் வீட்டுக்கு வருகிறார்கள் வேட்பாளர்கள். அப்படி தியாகம் செய்து மக்கள் சேவை புரியக் காத்திருக்கும் இவர்களுக்கு ஆர் கே நகர் என்ன கொடுக்கப் போகிறது? சிவன் பிள்ளையாருக்கு வெற்றிக்கனியாகக் கொடுத்த 'ஞானப்பழமா... 'கரகாட்டக்காரன்' செந்தில் கொடுத்த 'வாழைப்பழமா?' என்பதுதான் இப்போதைய கேள்வி. 

- விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!