ஆர்.கே.நகர் தொகுதியில் இரவிலும் ரோந்துப் பணி!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில், 5-ம் தேதி கட்சிகளின் சின்னம் பொருத்தும்பணி நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்தார். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி, புதுவண்ணாரப்பேட்டையில் நடந்தது. இந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் நாயர் ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பயிற்சி அளித்தார். 

சென்னை மாநகராட்சி கமிஷனரும் மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறுகையில், '' ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும், 1,635 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டது. தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு ஏற்கெனவே, எட்டு கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளன. இன்னும் இரண்டு கம்பெனி துணை ராணுவப்படை வர இருக்கிறது. அவர்கள், 75 குழுக்களாகப் பிரிந்து, ஆர்.கே.நகர் முழுவதும் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள். அவர்களுடன், தமிழ்பேசும் அதிகாரியும் இருப்பார். சந்தேக நபர்களைப் பிடித்து விசாரிப்பார்கள்.

தொகுதி முழுவதும் இரவிலும் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படும். இரவு நேர ரோந்துப்பணியில் ஐஏஎஸ்., ஐபிஎஸ்., அதிகாரிகளும் ஈடுபடுவார்கள். மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில், 5-ம் தேதி வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும்பணி நடைபெறும். வாக்காளர்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில், புதிய சாஃப்ட்வேர் பொருத்தப்படும்.வேட்பாளர்கள் முன்னிலையில் இந்தப் பணிகள் அனைத்தும் நடைபெறும். 

தேர்தல் விதி மீறல் தொடர்பாக, இதுவரை 370 புகார்கள் பெறப்பட்டு, அதில் 60 புகார்கள் உண்மை எனக் கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்துள்ளோம். ரூ.7 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களை, 94454 77205 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு அனுப்பலாம். தவறான தகவல் பரப்பினால், நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சொன்னார்.


-எஸ்.முத்துகிருஷ்ணன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!