பன்னீர்செல்வம் பின்னால் செல்வோம்! அமைச்சர் ஆர்.காமராஜ் திடீர் பேச்சு

ஜெயலலிதாவின் மரணம்தான் ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தின் மையப்புள்ளியாக இருக்கிறது. ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஜெயலலிதா மரணம் பற்றியே மாறி மாறிப் பேசிவருகிறார்கள். தொகுதி முழுவதும் உள்ள மக்களிடையேயும் அந்தப் பேச்சுதான் உள்ளது. ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சுகளை உடைத்து, உண்மையை வெளியே கொண்டு வர மதுசூதனனுக்கு ஓட்டு போடுங்கள் என்று பன்னீர்செல்வம் வாக்கு கேட்கிறார். சசிகலாவையும் டி.டி.வி.தினகரனையும் ஒவ்வொரு கூட்டத்திலும் போட்டுத் தாக்குகிறார். 

அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு டி.டி.வி.தினகரன் சார்பில் அமைச்சர்கள் பதில் சொல்லிவருகிறார்கள். ஆர்.கே.நகர், காசிமேடு 125, 126 பூத்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடம், அ.தி.மு.க அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது: 

''புரட்சித் தலைவி அம்மா அவர்கள்  அப்போலோ மருத்துவமனையில் சேர்வதற்கு முன்னால், போக்குவரத்துத்துறைக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் திட்டங்களை மூன்று முறை கொடியசைத்துத் தொடக்கிவைப்பார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியில் இரண்டு முறை மட்டும்தான் கொடியசைத்தார்கள். அந்த அளவுக்கு உடல் சோர்வுற்றிருந்தார். அவரிடம் 'மருத்துவமனைக்குச் செல்லலாம் வாருங்கள்' என்று சொல்ல யாருக்கும் தைரியம் கிடையாது. அப்போது, அவர்கள் வீட்டுக்குச் செல்லலாம் என்று சொல்லி விட்டார்கள். நானும் அமைச்சர்களும் உடனிருந்தோம். 

இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, நாங்கள் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளச் சென்றுவிட்டோம். 22-ம் தேதி, அம்மா அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். இந்தச் செய்தியைக் கேள்விபட்டதும் நாங்கள் ஓடோடி வந்துவிட்டோம். அம்மா அவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து 11 நாள் கழித்து, தலைமைச் செயற்குழுவைச் சந்தித்தாரா... இல்லையா? இல்லை என்று ஓ.பி.எஸ் சொல்லட்டும். அண்ணன் மதுசூதனன் சொல்லட்டும். இல்லை... அவருக்கு ஞாபகமறதி. அவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. அம்மா அவர்கள் சந்தித்ததை மனசாட்சியைத் தொட்டு சொல்லி, இங்கே ஓட்டு கேட்கட்டும்.  நாங்கள் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் செல்கிறோம். 

11 நாள் கழித்து அம்மா அவர்கள் மீண்டும் சோர்வடைகிறார்கள். மீண்டும் அம்மா அவர்களுக்கு தொற்று. இதையறிந்து, எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு வருகிறது. நாட்டின் பிரதமர் அனுப்பிவைக்கிறார். லண்டனில் இருந்து ரிச்சர்ட் பீலே வருகிறார். சிங்கப்பூரில் இருந்து மருத்துவர்கள் வருகிறார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வமே, அம்மா சாவில் மர்மம் இருக்கிறது என்று கூறுகிறாரே... அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று அரசியல் பண்ணலாமா? தி.மு.க செய்வது வாடிக்கை. அவர்கள் எதிர்கட்சி. 

 அம்மா மறைவுக்குப் பிறகு, சின்னம்மா பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று சொன்னது மதுசூதனனும், பன்னீர்செல்வமும்தானே? முதலில் சின்னம்மா காலில் விழுந்தது யார்? பன்னீர்செல்வம்தானே? முதலமைச்சர் ஆனதும் சின்னம்மா காலில் விழுந்தார். பதவி போனதும் மிகப்பெரிய பொய்யைச் சொல்கிறார். அம்மாவின் மரணம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அன்றைக்கு பன்னீர்செல்வம்தானே முதலமைச்சர். அவர்தானே அதற்கு பதில் சொல்ல வேண்டும்'' என்று காரசாரமாகப் பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!