வெளியிடப்பட்ட நேரம்: 02:27 (08/04/2017)

கடைசி தொடர்பு:18:59 (08/04/2017)

விடிய விடிய விசாரணை - விஜயபாஸ்கரை துளைத்தெடுத்த வருமானவரி அதிகாரிகள்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள, 'காவிரி' என்ற தமிழக அரசு பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அ.தி.மு.க அம்மா அணியின் சார்பில் ஆர்.கே.நகரில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு இவர் மிகவும் நெருக்கமானவர்.  தேர்தல்களின்போது ஓட்டுப்பதிவுக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்புதான் பணப்பட்டுவாடா நடக்கும். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருமே எதிர்பாராத வகையில் தேர்தலுக்கு 7 நாட்களுக்கு முன்னதாகவே  பணப்பட்டுவாடாவை அ.தி.மு.க அம்மா அணி வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டது.

 

 

பணப்பட்டுவாடாவை தடுக்க எத்தனையோ படைகளை தேர்தல் ஆணையம் அமைத்து இருந்தாலும் , அத்தனை படைகளின் கண்ணுக்குள்ளும் மண்ணைத் தூவிவிட்டு தங்களது காரியத்தை வெற்றிகரமாக தலைமை ஏற்று நடத்தி முடித்தது, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என்று பரவலாக பேச்சு இருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு 7-ம் தேதி காலை 6 மணிக்கு வந்தனர். அப்போது விஜயபாஸ்கர் வீட்டில்தான் இருந்தார். ஆர்.கே.நகர் பிரசாரத்துக்கு கிளம்பும் நிலையில் கட்சிக்காரர்களுக்கு போனில் சில  உத்தரவுகளை போட்டுக்கொண்டு இருந்தார். இந்நிலையில் வீட்டுக்குள் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அவரிடம் தகவலை சொல்லிவிட்டு  வீட்டை அங்குலம் அங்குலமாக சோதனைப் போட்டனர்.

 

 விஜயபாஸ்கர் ரெய்டு


அதே நேரத்தில் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அவருக்குச் சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகளில் இந்தச் சோதனை நடந்தது. கீழ்ப்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரி வீட்டில் சோதனை நடந்தது. சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியிலும் வருமான வரி சோதனை நடந்தது. அங்கு  ஐந்து அறைகளில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்கு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

சென்னையில் மட்டும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 20 இடங்கள் என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது அமைச்சரின் வீட்டில் இருந்தவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். சோதனை மேற்கொள்ளப்பட்ட இடங்களில் கிடைத்த ஆவணங்கள் அனைத்தையும் கிரின்வேஸ் சாலையில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டுக்கு மாலையில் கொண்டுவந்தனர். அந்த ஆவணங்கள் பற்றி விஜயபாஸகரிடம் தொடர்ந்து விசாரனை நடத்தினர். 
7-ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கிய வருமானவரிச்  சோதனை இரவு 12 மணியை தாண்டியும் நடந்தது. அதிகாரிகள், கேள்வி மேல் கேள்வி கேட்டு விஜயபாஸ்கரை துளைத்து எடுத்தனர். விஜயபாஸ்கர் சளைக்காமல் பதில் கொடுத்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விஜபாஸ்கர் ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் என்று ஏராளமானோர் விடிய விடிய அவரது வீட்டு முன்பு கூடியிருந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்களுக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: ஆ.முத்துக்குமார் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க