வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (09/04/2017)

கடைசி தொடர்பு:01:30 (09/04/2017)

தேர்தலை நிறுத்த சதி நடக்கிறது - பதறுகிறார் டி.டி.வி.தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் வேகமெடுத்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை நாள் நெருங்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை பல்வேறு வகையில் குற்றம்சாட்டி வருகின்றன. தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் புகார்களை கொடுத்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் பணப்பட்டுவாடா செய்துள்ளதாக அ.தி.மு.க அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மீது அனைத்து கட்சியினருமே புகார் கூறியுள்ளனர்.  ஆனால் இந்த புகார்களை டி.டி.வி. தினகரன் மறுத்துள்ளார். இதற்கிடையில் டிடிவி தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்லப்படும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் நடந்த சோதனை பல அதிர்ச்சி தகவல்களை வெளியே கொண்டுவந்துள்ளது.

 

தினகரன் 

இந்தச் சோதனைகள், 'தகவல் அடிப்படையில் வருமான வரித்துறை மேற்கொண்டது' என்று தமிழக பி.ஜே.பி தலைவர் டாக்டர் தமிழிசை சொல்லி இருந்தார். மேலும், தமிழிசை கூறுகையில், ''ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில்தான் இந்த வருமானவரிச் சோதனை நடந்து இருக்கிறது. வருமானவரித்துறை சோதனையில் எந்த உள்நோக்கமும் கிடையாது. கருப்பு பணத்தை பறிமுதல் செய்யவே இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த சோதனை வரவேற்கத்தக்கது'' என்றார். இதற்கு பதில் அளித்த டி.டி.வி.தினகரன், ''என்னுடைய வெற்றி உறுதியாகிவிட்டதால் தேர்தலை நிறுத்த சதி நடக்கிறது. ஆதாரங்களின் அடிப்படையில் சோதனை நடப்பதாக தமிழிசைக்கு எப்படித் தெரியும்?'' எனக் கேள்வி எழுப்பி உள்ளார் அவர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க