தேசிய அளவில் பசுவதைக்கு தடை... ஆர்.எஸ்.எஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு

நாடு முழுவதும் பசுவதையை தடை செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் கொள்கையுடன் தீவிர பிணைப்புள்ள பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் பசுவதைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் பசுவை கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்றினர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுவதையை தடைசெய்வதற்காக இறைச்சிக் கூடங்களை மூடி வருகின்றனர். சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங் பசுவை கொல்பவர்களை தூக்கிலிட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுபோன்று தொடர்ச்சியாக பசுவதைக்கு எதிராக பாஜக அரசு இயங்கி வருகிறது. சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் கறிக்காக பசு மாட்டை ஏற்றிச் சென்ற இஸ்லாமிய முதியவரை பசுக்காவலர்கள் அடித்துக் கொன்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வரும் சூழ்நிலையில் தற்போது மோகன் பக்வத் இந்த சம்பவங்களுக்கு ஆதரவு தரும் வகையில் பேசியுள்ளார். மகாவீரர் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், 'நாடு முழுவதும் பசுவதையை தடை செய்ய வேண்டும். அதற்கு உரிய வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும். அதுவரையில் சட்டத்திற்கு உட்பட்டு எங்களுடைய பசு மாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும்' என்று தெரிவித்துள்ளார்.  அவருடைய பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!