கறுப்புப் பணம் குறித்து அருண் ஜெட்லி புதிய தகவல்!

'ரூபாய் நோட்டுகள் தடைசெய்யப்பட்ட காலத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 5,400 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளது' என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, கடந்த நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. இதையடுத்து, கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவதற்காக நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் கறுப்புப் பணம் பிடிப்பட்டது. இருப்பினும், கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டதற்கான விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை.

இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'நாடு முழுவதும் 5,400 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளது. 18 லட்சம் பேர் வங்கியில் செலுத்திய பணத்துக்கும், அவர்கள் கட்டிய வரி விகிதத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. 610 கோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், 513 கோடி ரூபாய் பணமாக கைப்பற்றப்பட்டது. அதில், 110 கோடி ரூபாய், புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள்.

வங்கிகளில் செலுத்தப்பட்ட பணம்குறித்து ரிசர்வ் வங்கி துல்லியமாகக் கணக்கிட்டுள்ளது. அதன் விவரங்களை விரைவில் ரிசர்வ் வங்கி வெளியிடும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம்குறித்த அதிகாரபூர்வ கணக்கீடுகள் ஏதும் இல்லை. இருப்பினும், வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப்பணம் குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வருகின்றன. தேவையான நேரத்தில், வெளிநாடுகளில் பணம் பதுக்கும் விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!