கவர்னர் சொன்னது என்ன? - ஆர்.கே.நகர் கூட்டத்தில் உற்சாக துரைமுருகன்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தங்களது வெற்றிக் கணக்கைத் தொடங்கலாம் என்று இருந்தார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அதற்கு ஏற்றார்ப்போலவே அ.தி.மு.க அணி மூன்றாகச் சிதறி, தேர்தலைச் சந்தித்தது. பெங்களூரு ஜெயிலில் இருக்கும் சசிகலா தரப்பு, டி.டி.வி.தினகரனை வேட்பாளராக  இறக்கியது. சசிகலாவால் விரட்டி அடிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அணி, முன்னாள் அமைச்சர் மதுசூதனனை நிறுத்தியது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் கோதாவில் குதித்திருந்தார். தி.மு.க தரப்பில், பகுதிச் செயலாளர் மருதுகணேஷ் வேட்பாளராக வலம் வந்தார். இவர்களைத் தவிர, தே.மு.தி.க, மார்க்ஸிஸ்ட், நாம் தமிழர் கட்சி, பி.ஜே.பி வேட்பாளர்கள் களத்தில் நின்றாலும் தி.மு.க, சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியோருக்கு இடையேதான் போட்டி நிலவியது. இவர்களின் பிரசாரம் ஒவ்வொரு நாளும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் இருந்தது.

ஆளுநரை சந்தித்த துரைமுருகன்

வழக்கமான இடைத்தேர்தல் ஃபார்முலாவையே இந்தத் தேர்தலிலும் ஆளும்கட்சி இறக்கியது. யாரும் எதிர்பார்க்காத நிலையில், 90 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பட்டுவாடாவை முடித்துவிட்டு, நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த நேரத்தில், வருமான வரித்துறையினரும் களத்தில் குதித்தனர். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக ஸ்பீடு காட்டினர். விஜயபாஸ்கர், அவருக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் சிக்கிய ஆவணங்கள், ஆட்சியையே அதிரவைக்கும் வகையில் இருந்தது. வழக்கமாக, எதிர்கட்சிகள்தான் பணம் விநியோகம் என்று கூப்பாடு போடுவார்கள். ஆனால் இந்தத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கையின் பேரில் வருமான வரித்துறையினரே கையும் களவுமாக ஆதாரங்களைக் கண்டுபிடித்தனர். அதனால் இடைத்தேர்தல் ரத்தானாலும், தி.மு.க உற்சாகத்தில்தான் இருக்கிறது. ஏனென்றால், முதலமைச்சரே லஞ்சப்புகாரில் சிக்கி இருக்கிறார். மேலும், அவரது அமைச்சரவை சகாக்களும் சிக்கி இருப்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளும்கட்சி பெரும் நெருக்கடியைச் சந்திக்கவேண்டியது வரும் என்று தி.மு.க நினைக்கிறது.

அதனால்தான், கவர்னர் சென்னை வரும் வரை காத்திராமல், துரைமுருகனை மும்பைக்கு அனுப்பிவைத்தார் ஸ்டாலின். துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மும்பை சென்று, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தி.மு.க செயல் தலைவரின் புகார் மனுவைக் கொடுத்தனர். மும்பையில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்தச் சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடந்தது. வருமான வரித்துறையின் சோதனையின்போது சிக்கிய பணப்பட்டுவாடா பட்டியல் தொடர்பான நகலையும் கொடுத்தனர். மும்பையில் நடந்த சந்திப்பு முடிந்த பிறகு நிருபர்களை சந்தித்த துரைமுருகன், வழக்கத்துக்கு மாறாக மிகுந்த உற்சாகமாக இருந்தார். அதே உற்சாகத்தோடு, சென்னையில் ஆர்.கே.நகரில் நடந்த தி.மு.க கண்டனப் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

 ''இந்தியாவில் எந்தத் தொகுதியிலும் இல்லாத நிலை இந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏற்பட்டுள்ளது. எத்தனையோ கட்டுக்காவல்களை தேர்தல் ஆணையம் போட்டது. அனைத்தையும் மீறி, தாங்கள் நினைத்ததை ஆளும் கட்சி வெற்றிகரமாகச் செய்துமுடித்துவிட்டது. அதனால்தான், தேர்தல் ஆணையத்துக்கு இந்த அளவுக்கு கோபம் என்று நினைக்கிறேன். எதிர்கட்சிகள் செய்யவேண்டியதை, வருமான வரித்துறைமூலம் தேர்தல் ஆணையம் செய்துவிட்டது. அவர்கள் கண்டுபிடித்தது எல்லாம் பக்காவான ஆதாரங்கள். அதன் அடிப்படையில், முதல்வர் உள்ளிட்ட பணப்பட்டுவாடா அமைச்சர்கள் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும். அவர்களைக் கைதுசெய்ய வேண்டும். சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். 

அவர் அதை முழுமையாகப் படித்துப் பார்த்ததோடு மட்டுமல்லாமல், தான் மும்பையில் இருந்தாலும் சென்னையில் நடக்கும் அத்தனை விஷயங்களும் தனக்குத் தெரியும் என்றார். தமிழக நிலவரம் பற்றி பேப்பர், டி.வி-க்களில் செய்திகளைப் பார்ப்பதாகவும் தெரிவித்தார். அவரது வார்த்தைகள் நம்பிக்கை தரும் வகையில் இருந்தன. இந்த அரசை இனியும் விட்டுவைத்தால், இதே வேலையைத்தான் செய்து கொண்டு இருப்பார்கள். ஜனநாயகம் இருக்காது என்றும் கவர்னரிடம் சொன்னோம். அவரும், நாங்கள் சொன்ன அனைத்து விவரங்களையும் அமைதியாகக் கேட்டார். 'எல்லாம் தெரியும்' என்று திரும்பவும் சொன்னார். எனவேதான் சொல்கிறேன், ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அல்ல; தமிழ்நாட்டுக்கே பொதுத்தேர்தல் வரப்போகிறது. என்னுடைய கணக்குப்படி பார்த்தால், வரும் ஜனவரியில் சட்டமன்ற பொதுத்தேர்தலைச் சந்திக்கவேண்டியது இருக்கும்" என்று உற்சாகத்தை கிளப்பிப் பேசி முடித்தார்.

துரைமுருகன் மும்பை சென்று வந்த உற்சாகம், ஸ்டாலினின் ஆர்.கே.நகர் பேச்சிலும் தெரிந்தது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!