'விஜயபாஸ்கரை விலக்குங்கள்' - தினகரனை நெருக்கும் எடப்பாடி பழனிசாமி | Will Vijayabhaskar continue as Minister?

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (14/04/2017)

கடைசி தொடர்பு:19:20 (14/04/2017)

'விஜயபாஸ்கரை விலக்குங்கள்' - தினகரனை நெருக்கும் எடப்பாடி பழனிசாமி

வருமான வரித்துறையினரின் சோதனை வளையத்திற்குள் சிக்கியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து அகற்ற டி.டி.வி.தினகரனுக்கு மற்ற அமைச்சர்கள் நெருக்கடிகள் கொடுத்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதுதொடர்பாக தினகரனுக்கு நெருக்கடி அளிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

எடப்பாடி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து வந்தார். அந்த நிலையில், அவர் முதல்வராக பொறுப்பேற்ற ஒரு மாத காலத்தில் அவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அந்த நேரத்தில் தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தனர் என்று பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதனையடுத்து அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. பன்னீர்செல்வத்தின் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இருப்பினும் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சசிகலாவுக்கு சிறை தண்டனையை உறுதிப்படுத்தியது.

சசிகலா சிறைக்கு சென்றதையடுத்து எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அதில் இருந்து மத்திய அரசு, தமிழக அரசுடன் இணக்கமாக செயல்படாத ஒரு சூழலே நிலவி வந்தது. இத்தகையை சூழ்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் வருமான வரித்துறையினர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். மேலும் சரத்குமார், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையைத் தொடர்ந்து விஜயபாஸ்கர், சரத்குமார், கீதாலட்சுமி ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

மோடி

இத்தகைய சூழலில் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வருமான வரிச் சோதனையின் மூலம் ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். சசிகலா சிறைக்கு செல்வது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து உள்ளிட்ட சம்பவங்களை தமிழிசை முன்னதாக கூறி இருந்தார். அதேபோல் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படலாம் என்ற தமிழிசையின் கருத்தை அரசியல் விமர்சகர்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதுகிறார்கள். வருமான வரித்துறையினரின் சோதனையை மத்திய அரசின் நடவடிக்கையாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். வருமான வரித்துறையின் சோதனையைத் தொடர்ந்து விஜயபாஸ்கர், வீட்டில் தங்காமல் தனியார் ஓட்டலில் தங்கி வருவதாகவும் மேலும் ஓரிடத்தில் நிலையாக இருக்காமல் இன்னோவா காரிலேயே சுற்றி வருகிறார் என்பது போன்ற தகவல்கள் வருகின்றன. அவர் வருமான வரித்துறையினரின் நெருக்கடியிலேயே இருந்து வருகிறார்.

விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மற்ற அமைச்சர்கள் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கடி அளிப்பதாகவும், எடப்பாடி பழனிசாமியும் அதே கருத்தை வலியுறுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜயபாஸ்கர் கடுமையான நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறார். இன்று மற்ற அமைச்சர்கள் டி.டி.வி.தினகரனை சந்தித்த போதும், அந்த சந்திப்பை விஜயபாஸ்கர் தவிர்த்து விட்டார்.இருப்பினும் டி.டி.வி.தினகரனின் மனநிலை தெரியவில்லை.

தினகரன்

நேற்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்து நமது எம்.ஜி.ஆரில் கட்டுரைகள் வந்தன. ஆனால் இன்று டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசும் போது, 'இரட்டை இலைச் சின்னம்  முடக்கத்துக்கு மத்திய அரசு காரணம் இல்லை என்று கூறினார். மேலும் அமைச்சர்கள் புத்தாண்டு வாழத்து கூறவே வந்தனர்' என்றும் கூறினார். அப்போது அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுமா என்று நிருபர் கேட்டதற்கு உறுதியான பதில் அளிக்கவில்லை. மத்திய அரசின் நெருக்கடியை தவிர்க்கவே தினகரன் அமைதியாகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்தநிலையில் பன்னீர்செல்வம் தரப்பினர், 'மீண்டும் தங்களது அண்ணன் முதல்வர் ஆவார்' என்று ஆரூடம் கூறி வருகின்றனர். பன்னீர்செல்வத்துக்கு கூடுதலாக 10 அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும்' அவர்கள் தெரிவித்து வருகின்றனர். வருமானவரித்துறையினரின் சோதனை மற்றும் சக அமைச்சர்களின் எதிர்ப்பால் விஜயபாஸ்கருக்கு கடுமையான நெருக்கடிகள் உருவாகியுள்ளது. இதனால் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று தெரிகிறது. 

சி.கார்த்திக்