தி.மு.க அனைத்துக் கட்சிக் கூட்டம்: முத்தரசன், திருமாவளவன் பங்கேற்பு!

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக வரும் 16-ம் தேதி தி.மு.க அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளன. இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆலோசனைக்குப் பின் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. 


வறட்சி நிவாரணம் வழங்குதல், வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 30 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இருப்பினும் மத்திய அரசு சார்பில் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக இதுவரையில் உறுதியான பதில் அளிக்கவில்லை.

தமிழக அரசும் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. இந்நிலையில், தி.மு.க சார்பில் வரும் 16-ம் தேதியன்று அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்க உள்ளார். தற்போது, இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 'ஆலோசனைக்குப் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து முடிவு அறிவிக்கப்படும்' என்று தெரிவித்துள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து பேசிய ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், 'விவசாயிகள் பிரச்னை குறித்து பேசுவதற்கு தி.மு.க.வுக்கு தகுதி இல்லை' என்று கூறினார். கடந்த முறை தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்றது. தற்போது, ஜி.கே.வாசன் பன்னீர்செல்வத்துடன் இணக்கமாக இருக்கும் சூழலில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அவர் பங்கேற்பது கேள்விக்குரியாகி உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!