மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால்... கொந்தளிக்கும் வெங்கையா நாயுடு | Religion based reservation will create another Pakistan, says Venkaiah Naidu

வெளியிடப்பட்ட நேரம்: 12:19 (15/04/2017)

கடைசி தொடர்பு:12:18 (15/04/2017)

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால்... கொந்தளிக்கும் வெங்கையா நாயுடு

'மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது, இன்னொரு பாகிஸ்தான் உருவாக வழிவகுக்கும்' என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் 126-வது பிறந்தநாளை முன்னிட்டு, பா.ஜ.க சார்பில் ஹைதராபாத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.

vengaiah  naidu

அப்போது, 'மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதை பா.ஜ.க எப்போதும் எதிர்த்துவருகிறது. மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது, மக்களை மதரீதியில் பிளவுபடுத்திவிடும். அமைதியில்லாத சூழலை ஏற்படுத்திவிடும். சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு, மதரீதியிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தொடர்ந்து முயன்றுவருகிறது. இதேபோல ராஜசேகர ரெட்டி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் முயன்றபோதும் நாங்கள் அதைக் கடுமையாக எதிர்த்தோம். மதரீதியிலான இட ஒதுக்கீடு, இன்னொரு தேசப் பிரிவினைக்கு வழிவகுத்துவிடும்' என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், 'அதனால் அதனை எதிர்ப்போம். எந்த மதத்தினராக இருந்தாலும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு  இட ஒதுக்கீடு வழங்குவதைத்தான் அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது. நமது அரசமைப்புச் சட்டத்தைக் கட்டி எழுப்பிய அம்பேத்கர் கூட, மதரீதியிலான இட ஒதுக்கீடை அங்கீகரிக்கவில்லை' என்றார்.

பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்களில் பின் தங்கிய பிரிவினருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில், புதிய சட்டம் இயற்றுவதற்கு சந்திரசேகர ராவ் அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளிக்காதநிலையில், உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்று சந்திரசேகர ராவ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்தநிலையில், மத்திய அரசின் சார்பில் வெங்கைய நாயுடு, சந்திரசேகர ராவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.