வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (15/04/2017)

கடைசி தொடர்பு:13:00 (15/04/2017)

மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றார் ராமகிருஷ்ணன்!

விவசாயிகள் பிரச்னை தொடர்பாக, தி.மு.க நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்கும் என்று அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வறட்சி நிவாரணம் வழங்குதல், வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் டெல்லியில் 30 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

இருப்பினும், மத்திய அரசு சார்பில் கோரிக்கைகள் நிறைவேற்றுவது தொடர்பாக இதுவரையில் உறுதியான பதில் அளிக்கவில்லை. தமிழக அரசும், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. இந்த நிலையில், தி.மு.க சார்பில் 16-ம் தேதி (நாளை) அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்க உள்ளார்.

ஏற்கெனவே, இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  அந்த க்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் வரலாறு காணாத வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணம் தொடர்கிறது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்துவருகிறது. இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாளை (16.04.2017) நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், தற்போது பன்னீர்செல்வத்துடன் இணக்கமாக இருந்துவருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு அளித்தார். எனவே, கடந்த முறை காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க ஏற்பாடுசெய்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ், இந்த முறை பங்கேற்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.