பரோல் தயார்! எப்போது வெளியே வருகிறார் சசிகலா? | Will Sasikala release on Parole for her nephew Mahadevan's funeral

வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (15/04/2017)

கடைசி தொடர்பு:14:37 (15/04/2017)

பரோல் தயார்! எப்போது வெளியே வருகிறார் சசிகலா?

மகாதேவன் - சசிகலா உறவினர்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, தனது அண்ணன் மகன் மகாதேவனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிறையில் இருந்து  முதல்முறையாக பரோலில் வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மகன் டி.வி.மகாதேவன் (47) திருவிடைமருதூரில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தஞ்சாவூரில் வசித்துவந்த மகாதேவன், இன்று காலை (15-04-17) திருவிடைமருதூரில் உள்ள கோயிலுக்குச் சென்றபோது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவரை கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவருடைய உயிர் முன்னேயே பிரிந்துவிட்டதாகத்  தெரிவித்தனர். தற்போது அவரது உடல் தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டில் முக்கியப் பிரமுகர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மரணம் அடைந்த மகாதேவனின் அத்தை சசிகலா,  அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொள்வார் என்று தெரிகிறது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்வதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி உத்தரவிட்டனர். இதனையடுத்து பிப்ரவரி 15-ம் தேதி மாலை சசிகலா உள்ளிட்டோர் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகி சிறையில் அடைக்கப்பட்டனர்.

பரோலில் வெளியே வருகிறார் சசிகலா!

இந்த நிலையில்தன் அண்ணன் மகன் மரணத்தைத் தொடர்ந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு வருவாரா என்பது பற்றி அ.தி.மு.க. வழக்கறிஞர்களிடம் பேசியபோது, "நிச்சயம், அவர் பரோலில் வெளியே வருவார். அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். அவர், பரோலில் வெளியே வருவதற்கு ஏதுவாக, கர்நாடக மாநில சிறைத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். சிறைத்துறை கண்காணிப்பாளரே பரோலில் அனுப்புவதற்கு அதிகாரம் உள்ளவர். ஒருவேளை சிறை நிர்வாகம் மறுத்தால், கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சரிடம் கையெழுத்துப் பெற்று பரோலில் வெளியே வரலாம். இவர்கள் இரண்டு தரப்பும் பரோல் கொடுக்க மறுக்கும்பட்சத்தில்தான், உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும். எனினும், சிறைத்துறை அதிகாரிகளே சசிகலாவுக்கு பரோல் அளித்துவிடுவதற்கான வாய்ப்புகள் 100 சதவிகிதம் உள்ளது" என்கிறார்கள்.
 
இதுபற்றி சசிகலாவின் வழக்கறிஞர் செந்திலிடம் பேசியபோது, ‘‘மகாதேவன் மரணம் பற்றிய தகவலை மேடத்திடம் சொல்லியிருக்கிறோம். அவரிடம் இருந்துவரும் தகவலைப் பொறுத்து, பரோலுக்குத் தேவையான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். "சசிகலா பரோலில் வருவாரா" என்று கேட்டதற்கு, "அதை மேடம்தான் தீர்மானிக்க வேண்டும். உங்கள் யூகத்துக்கு என்னால் பதில் அளிக்க முடியாது’’ என்றார்.

பரோலுக்கான விதிமுறைகள்!

கர்நாடக மாநிலத்தில் சிறையில் இருக்கும் ஒருவர் பரோலில் வெளியே செல்ல வேண்டுமானால், கடந்த 2015-ம் ஆண்டுவரை  டெபாசிட் தொகையாக 6,000 ரூபாயும், இருநபர் ஜாமீனும் அளிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது பரோலில் வெளியே வருபவர்கள் டெபாசிட் தொகையாக 1,000 ரூபாயும், ஒருநபர் ஜாமீனும் போதுமானது.  கர்நாடகச் சிறைகள் சட்டம் 1963 பிரிவு 56-ன் கீழ், மாநில அரசோ, மாநில அரசாங்கத்தால் அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் மூலமாகவோ பரோல் அளிக்கப்படலாம். கர்நாடகச் சிறைகள் சட்டம் 1963 பிரிவு 58-ன் கீழ் பரோல் வழங்கப்பட்ட காலத்துக்குள் வரவில்லை என்றால் 2 வருடம் சிறைத் தண்டனை அல்லது அபராதம், இரண்டும் சேர்த்தோ வழங்கப்படும்.

அ.தி.மு.க-வில் மகாதேவனின் செல்வாக்கு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, 2011-ம் ஆண்டு, அ.தி.மு.க-வில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்கள் அனைவரும் மீண்டும் போயஸ்கார்டனில் சுதந்திரமாக உலாவரத் தொடங்கினர். அந்த வகையில், தற்போது மரணம் அடைந்த மகாதேவன், அத்தை சசிகலாவுக்கு அரண்போலத் திகழ்ந்தவர். சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க-வில் தனி அணியாகப் பிரிந்ததும், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை கூவத்தூரில் தங்கவைத்தது முதல், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி, சசிகலா பெங்களூரு செல்லும்வரை அத்தையுடனேயே இருந்தார் மகாதேவன். அந்த அளவுக்கு சசிகலா மீது பற்றுக்கொண்டிருந்தவர்.

தற்போது மகாதேவன் மரணம் அடைந்ததால், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் நீதிமன்றத்தில் பரோல் பெற்று நிச்சயம் தஞ்சாவூர் வருவார்கள் என்று அ.தி.மு.க-வுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக அவர் பரோல் கோரி வழக்கறிஞர் மூலம் விண்ணப்பிக்க உள்ளார். அவருக்கு பரோல் கிடைத்த பிறகே, மகாதேவனின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியைவிட்டு ஒதுங்கி இருந்தவர்!

தஞ்சாவூரில் வினோதகன் மருத்துவமனை, டி.வி.எம் பேருந்துகள் ஆகியவை மகாதேவனுக்குச் சொந்தமாக உள்ளன. அதிக ஆன்மிக ஈடுபாடு கொண்டவர். நூற்றுக்கணக்கான கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்துள்ளார். திவாகரனுக்குச் அடுத்து தஞ்சாவூரில் செல்வாக்கோடு திகழ்ந்தவர். இவருக்கும் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கும் ஆகாது. அதனால் அவருக்கு ஏதாவது குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருந்தவர்.

2001-2006-ம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியின்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தவர் மகாதேவன். இவரது தம்பி தங்கமணி. அ.தி.மு.க-வினர் யாரும் மகாதேவனுடன் தொடர்புவைத்துக் கொள்ளக்கூடாது என்று ஜெயலலிதா அறிக்கை விட்ட நிலையிலும், "எனக்கு சசிகலா அத்தையின் ஆதரவு உள்ளது" என்று அலட்டிக்கொள்ளாமல் இருந்தவர். அவர் சொன்னதுபோலவே வெளியேற்றப்பட்ட சில ஆண்டுகளில் ஜெயலலிதா பேரவைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டபோது மீண்டும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அந்தநேரத்தில், நீக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினர் பட்டியலில் முதலில் மகாதேவன், அவரது தம்பி தங்கமணி ஆகியோர் பெயர்கள் இல்லை. பின்னர் சில மணி நேரம் கழித்து இருவரும் நீக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

- சி.வெங்கட சேது, வீ.கே.ரமேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்