முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வம் அணியினரை வசைபாடும் மு.க.ஸ்டாலின்!

நேற்று வரையில் பரம விரோதிகளாகவும், ஊழல் பெருச்சாளிகளாகவும் இருந்தவர்கள் தற்போது கைகோத்து 'தமிழக நலன் காக்கப் போகிறோம்' என்று ஊரை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று வசையாடியுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சுதந்திரமான அமைப்பான வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ அமைப்புகளை தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்துபவர்கள் யார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரு அணிகளும் இணைவதற்கான முயற்சிகள் குறித்து தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், ''ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வருமான வரித்துறை ரெய்டும், அ.தி.மு.கவுக்குள் குழப்பமும் தொடர்ந்து நிலவி வருகிறது. நேற்று வரையில் பரம விரோதிகளாகவும், ஊழல் பெருச்சாளிகளாகவும் இருந்தவர்கள் தற்போது கைகோத்து 'தமிழக நலன் காக்கப் போகிறோம்' என்று ஊரை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கரூர் அன்புநாதன், நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் உள்ளிட்டவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகள் என்ன ஆயிற்று என்று இன்று வரை தெரியவில்லை. சேகர்ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு அவரை மட்டுமே அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆனால் அவருடன் தொடர்பில் உள்ள பன்னீர்செல்வம் மீதோ மற்ற அ.தி.மு.க நிர்வாகிகள் மீதோ விசாரணை  நடைபெறுவதாக தெரியவில்லை. சுதந்திரமான அமைப்பான வருமான வரித்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளை தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்துபவர்கள் யார். இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக கைது செய்யப்பட்டவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் இன்று வரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லையே ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபட்ட இரு அணியைச் சேர்ந்த அமைச்சர்கள், அவர்களுக்கு துணைபோன அதிகாரிகள் ஆகியோர் மீது மத்திய அரசு ஒளிவுமறைவு இல்லாத விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!