வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (22/04/2017)

கடைசி தொடர்பு:11:36 (22/04/2017)

பாபர் மசூதி இடிப்புக்கு நான் தான் காரணம்! பாஜக முன்னாள் எம்.பி வேதாந்தி சர்ச்சை பேச்சு

பாபர் மசூதி இடிப்பில் அத்வானி யாரையும் தூண்டவில்லை. நான் தான் கரசேவகர்களை தூண்டினேன் என்று பா.ஜ.க முன்னாள் எம்.பி வேதந்தி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி ஆயிரக்கணக்கான கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. சுமார் 450 ஆண்டுகால பாரம்பர்யம் கொண்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டது இந்திய ஒருமைப்பாட்டை சிதைக்கும் ஒரு செயலாக அமைந்தது. கரசேவகர்களின் இந்தச் செயலால் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, உமாபாரதி, முரளிமனோகர் உள்ளிட்ட 21 பேரின் மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது.

ரேபரேலி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற அந்த வழக்கில் இருந்து 2001-ம் அனைவரையும் விடுவித்தது நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ  மேல்முறையீடு செய்தது. 2010-ம் ஆண்டில் உயர்நீதிமன்றம் ரேபரேலி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. இதனையடுத்து, 2011-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு சில நாள்களுக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி  உள்ளிட்ட தலைவர்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அத்வானி மற்றும் பா.ஜ.கவுக்கு ஏற்பட்ட சிக்கலாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு குறித்து பா.ஜ.க முன்னாள் எம்.பி வேதந்தி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். ''பாபர் மசூதி இடிப்புக்கு நான் தான் காரணம். அத்வானிக்கும் பாபர் மசூதி இடிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி கரசேவகர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்தனர். நானும், மறைந்த அசோக்சிங்கால், மஹந்த் அவித்யானந்த் ஆகியோர்தான் கரசேவகர்களை தூண்டினோம்' என்று தெரிவித்துள்ளார்.