இந்தி தேசமாக மாற்றாதீர்கள்! மத்திய அரசை எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்

இந்திய தேசத்தை இந்தி தேசமாக மாற்றி இன்னொரு இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு வித்திட வேண்டாம் என்று மத்திய அரசுக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

m.k.stalin


மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தானே பேசிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளளார். அதில் பேசிய அவர், 'குடியரசுத்தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்தியில் பேசவோ, எழுதவோ தெரிந்திருந்தால் தங்களது உரையையும் அறிக்கையையும் இந்தியில்தான் கொடுக்க வேண்டும் என்கிற நாடாளுமன்றக்குழுவின் பரிந்துரைக்கு குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விமானநிலைய அறிவிப்புகள், பத்திரிகை செய்திகள், விளம்பரங்கள் எனப் பலவற்றிலும் இந்தியை பரவச் செய்யும் அம்சங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதுடன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் என்ற நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெளியிடும் விளம்பரங்கள் எந்த மொழியில் இருந்தாலும், அந்த சொற்கள் இந்தி உச்சரிப்பாகவே அமைகின்றன. ஆசிரியர் தினத்தைக்கூட குரு பூர்ணிமா என மாற்றியது மோடி அரசு. இந்தி மொழிக்கு மட்டும் முதலிடம் கொடுத்து, மற்ற மொழிகள் பேசும் இந்திய மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும். தாய்மொழி மீது இன்னொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை 1938ம் ஆண்டு முதலே எதிர்த்து நின்று வெற்றி கண்ட நிலம், தமிழகம். இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட வேண்டாம்' என்று அந்த வீடியோ பதிவில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!