வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (25/04/2017)

கடைசி தொடர்பு:18:57 (25/04/2017)

முழு அடைப்பு போராட்டம் வெற்றி! ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நன்றி

இன்று பல்வேறு கட்சிகளின் சார்பில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வெற்றிபெற்றுள்ளதாக கூறியுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

dmk

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிட கழகம், விடுதலைச் சிறுத்தை கட்சி, அகில இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்துக்கொண்டன. இதையடுத்து தற்போது போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் கூறியதாவது :

ஸ்டாலின் (தி.மு.க) : தமிழகம் முழுவதும் நடைபெற்ற இப்போராட்டம் சிறப்பான முறையில் வெற்றியடைந்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி. இதையடுத்தாவது மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் பிரச்னைகள் குறித்த நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) :இது விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம். மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட போராட்டம். இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.

ஜி.ராமகிருஷ்னன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) : முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிபெறச்செய்த அனைத்து தொழிற்சங்க அமைப்புகளுக்கும், வணிகர்களுக்கும், ஆதரவளித்த பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் அனைவருக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்வதோடு, மறியலில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

இதையடுத்து மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு, கைது செய்யபட்டவர்களை விடுவித்துள்ளது காவல்துறை.