சசிகலா, டி.டி.வி.தினகரன் நீக்கமா..?- மா.செ கூட்டத்தில் மல்லுக்கட்டு! | Are Sasikala and TTV Dinakaran going to be excluded from ADMK?

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (25/04/2017)

கடைசி தொடர்பு:20:11 (25/04/2017)

சசிகலா, டி.டி.வி.தினகரன் நீக்கமா..?- மா.செ கூட்டத்தில் மல்லுக்கட்டு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் அணி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி எப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அ.தி.மு.க கட்சித் தொண்டர்கள் உள்ளனர். 

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று இரவு அல்லது நாளை காலை முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்த இரண்டு அணிகளும் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமைச்சர்கள் அணி கூறுகையில், 'ஓ.பி.எஸ் அணியுடன் போனில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். நாளை அமாவாசை என்பதால் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம். அதற்கான இடம் மற்றும் நேரம் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இதற்கிடையில், எங்கள் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்துவருகிறது. இதிலும், பேச்சுவார்த்தை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும் சசிகலா, டி.டி.வி.தினகரன் நீக்கம் குறித்தும் பேசப்பட்டது' என்றனர்.

ஓ.பி.எஸ் அணியினர் கூறுகையில், 'இணைப்பு குறித்தான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். எங்கள் பேச்சுவார்த்தைக் குழுவினரிடம் அமைச்சர் அணியில் இருந்து போனில் பேசினார்கள். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தும் இடம் மற்றும் நேரம் குறித்து தெரிவிப்பதாகக் கூறியுள்ளனர். எங்களது கோரிக்கையான, சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் நீக்கம் தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நல்லதொரு முடிவு எடுப்பார்கள் என்றே எதிர்பார்க்கிறோம்' என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

படம்: ஜெரோம்