வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (26/04/2017)

கடைசி தொடர்பு:17:22 (26/04/2017)

வைகோவுக்கு ஆதரவாக களமிறங்கும் சீமான்

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் வைகோ மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

வைகோ

கடந்த 2009ல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  8 வருடங்களுக்கு மேலாகியும் முடித்து வைக்கப்படாததால், வழக்கை விரைந்து முடிக்கக்கோரி, பிணையை மறுத்துச் சிறைச்சென்றார் வைகோ. 20 நாள்களுக்கு மேலாக அவர் சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில் வைகோவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் சீமான். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தின் வாழ்வாதாரத்தினையும், நிலவளத்தினையும் நிர்மூலமாக்கும் திட்டங்கள் தமிழர் மண்ணில் புகுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராக, அனுபவங்கள் பல பெற்ற வைகோ இத்தகைய சூழலில் சிறைப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்பாகும். அவர் விரைவில் சிறைமீண்டு தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் தருணத்தை எதிர்நோக்குகிறோம். எனவே, வைகோ  மீது தொடரப்பட்ட இப்போலியான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். வைகோ விடுதலைபெற்று தனது அரசியல், சமூகப் பங்களிப்பை செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என்று கூறியுள்ளார்.