தனியாரிடம் டாஸ்மாக்... உளவுப்பிரிவு எஸ்.பிக்கு சிக்கல்... அழுது வடியும் ஐ.ஜி! #NewsChat #3MinsRead

பன்னீர்செல்வம்

தமிழகத்தில் மொத்தம் 6,800 டாஸ்மாக் கடைகள் இருந்தன. ஜெயலலிதா காலத்தில் 500, அடுத்து எடப்பாடி காலத்தில் 500... என்று 1,000 கடைகள் மூடப்பட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைகளில் இருந்த 3,200 கடைகள் இப்போது மூடப்பட்டுவிட்டன. மீதி இருப்பதோ, சுமார் 2,600 மட்டுமே. மூடப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் தேடுவதில், ஆங்காங்கே மக்கள் போராட்டம் வெடிக்கிறது. எனவே, தனியாரிடம் ஏலம் விட்டுவிடலாமா? என்கிற யோசனை அரசின் பரிசீலனையில் இருக்கிறது. 'சட்டம்-ஒழுங்குப் பிரச்னைகளை அவர்களே உள்ளூரில் சரிசெய்துவிடுவார்கள்' என்று கணக்குப்போடுகிறார்கள் டாஸ்மாக்கின் உயர் அதிகாரிகள்.  

தமிழக போலீஸின் உளவுப்பிரிவு எஸ்.பி பதவி முக்கியமானது. இந்தப் பதவியில் தற்போது இருப்பவர் கண்ணன். இவருக்கும் சசிகலாவின் அக்காள் மகன் தினகரனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஒரு திரியை கொளுத்திப் போட்டிருக்கிறார்கள். 'தகவல் கசிவது இப்படித்தான்...' என்று பழியை கண்ணன் மீது போட்டதன் விளைவு... அடுத்த சில நாட்களில் கண்ணனை டம்மியான பதவிக்கு தூக்கியடிக்கப் போகிறார்கள்.

அ.தி.மு.க-வில் சமீபத்தில் நடக்கும் உள்குத்துகளைப் பார்த்து, 'வேண்டவே வேண்டாம்' என்று ஏதேதோ சாக்குப்போக்குகளை சொல்லி லீவு போட்டுவிட்டுப் போனார் உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி. ஒரு மாதம் ஆகியும் அந்தப் பதவியில் அமர யாரும் வரமறுக்கவே, வேறுவழியில்லாமல் மீண்டும் சத்தியமூர்த்தியை இழுத்துவந்து வலுக்கட்டாயமாக அதே பதவியில் உட்காரவைத்துவிட்டார்கள். பாவம், மனுஷன் அழுது வடிகிறார். என்ன இருந்தாலும், எடப்பாடி சமூகத்தவராச்சே? 

முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையும் அவரது செக்யூரிட்டி பிரிவு எஸ்.பி-யாக இருந்தவர் சுதாகர். அவருக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலகட்டத்தில் சுதாகர்தான் செக்யூரிட்டி எஸ்.பி-யாக நீடித்தார். அவரைத்தொடர்ந்து எடப்பாடியார் முதல்வர் ஆனதும் சுதாகரே தொடர்ந்தார். ஆனால், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர் சுதாகர் என்று கொங்கு மண்டலத்து பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடியார் காதில் போட, தற்போது சுதாகரை அங்கிருந்து மாற்றிவிட்டார்கள். அவருக்குப் பதில் ராமர் என்பவரை நியமித்திருக்கிறார்கள். 

விஜயபாஸ்கர்அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோரது வீடுகளில்  வருமானவரித்துறை ரெய்டு நடந்தபோது, அத்துமீறி உள்ளே நுழைந்த தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகிய நால்வரும் பணி செய்யவிடாமல் தடுத்ததாக சென்னை போலீஸில் புகார் பதிவானது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவை எளிதில் பெயிலில் வரக்கூடிய சட்டப்பிரிவுகளாக இருந்ததாக வருமானவரித்துறை அதிகாரிகள் டென்ஷன் ஆனார்கள். இந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றக் கதவுகளைத் தட்ட தயாரானார்கள். ஆனால், கடைசி நிமிடத்தில் டெல்லி மேலிடம் அவர்களுக்கு தடா போட்டுவிட்டது. 

சென்னை ஆர்.கே. நகர் தேர்தல் நின்றுபோனது தெரியும். ஆனால், தெரியாத விஷயம்... தேர்தலுக்கு முன்பு, எதிர்க்கட்சியினரின் புகார்களுக்கு ஆளான போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், கூடுதல் கமிஷனர் சாரங்கன் உள்ளிட்ட 22 பேர்கள் மற்றும் 10 வருவாய்த்துறை அதிகாரிகள் தற்போது நட்டாற்றில் நிற்கிறார்கள். தேர்தல் நின்ற மறுநாளே இவர்கள் அனைவரையும் பழைய இடங்களில் நியமித்திருக்கவேண்டும். ஆனால், பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகியும், அவர்களை எடப்பாடி அரசு கண்டுகொள்ளவில்லை.  தினகரனை ஜெயிக்க வைக்கவாப் பார்த்தீர்கள்? என்று சொல்லி ஃபைலை பெண்டிங் வைத்துவிட்டாராம் முதல்வர் எடப்பாடி.

ஜெயலலிதா காலத்தில் ஆரம்பித்து, அடுத்ததாக முதல்வர் பதவியில் அமர்ந்த ஓ.பன்னீர்செல்வம் காலம் வரை சுமார் 2,000 அரசுத்துறை ஃபைல்கள் பெண்டிங் கிடந்ததாம். பல மாதங்களாக முடங்கிக் கிடந்த அந்தப் ஃபைல்களை தூசுதட்டிப் பார்த்த தற்போதைய முதல்வர், முதல்கட்டமாக சுமார் 1,540 ஃபைல்களில் கையெழுத்துப் போட்டுவிட்டாராம். தலைமைச் செயலகம் ஆச்சரியப்படுகிறது. 

நெடுஞ்சாலை டெண்டர்கள் தற்போது நொண்டியடிக்கின்றன. 25 சதவிகித கமிஷனை முதலில் தருகிறவர்களுக்கு டெண்டர் ஓ.கே. ஆகும். இப்போது அமைச்சர்கள் பலரும் கான்ட்ராக்ட்காரர்களை கூப்பிட்டு, 'வொர்க் ஆர்டரை வாங்கிச் செல்லுங்கள்' என்று பொடி வைத்துப்பேசுகிறார்களாம். ஆனாலும் கான்ட்ராக்ட்டர்கள் தலைமறைவாகிவிடுகிறார்களாம். காரணம்... தமிழக அரசியலில் நிலவும் குழப்பமான சூழ்நிலை. இன்று எடப்பாடி இருக்கிறார். நாளைக்கு யார் இருப்பார்களோ? இந்த நிலையில்,  முன்கூட்டியே யாரிடமாவது  கமிஷன் தொகையை கொடுத்து ஏமாந்துவிடக்கூடாதல்லவா? என்று சொல்லிப் பதுங்குகிறார்கள். 

ஏப்ரல் 25-ம் தேதியன்று டெல்லியில் தினகரன் கைதானார். அடுத்த நாள் காலை... சென்னை அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் சசிகலா, தினகரன் பேனர்கள் அகற்றப்பட்டன. இதைப்பற்றி எடப்பாடி கோஷ்டியினரிடம் கேட்டபோது, ''பேனர்களை அகற்றிவிட்டு, அம்மா பேனரை வைக்க ஏற்கெனவே ஆர்டர் கொடுத்திருந்தோம். அது லேட்டாக தற்போதுதான் வந்தது. அது வந்ததும், பழையவர்களின் பேனர்களை கழட்டிவிட்டோம். இதற்கும் தினகரன் கைதுக்கும் சம்பந்தமில்லை'' என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள்.  

 

ஓ.பன்னீர்செல்வம் திடீர் முடிவு

ஓ.பன்னீர்செல்வம் வசம் 13 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். 'முதல்வர் எடப்பாடியார் மற்றும் அமைச்சர்களில் பலரும் ஊழல் செய்தவர்கள். இவர்களைப் போலவே, 121 எம்.எல்.ஏ-களில் பெரும்பாலானவர்கள் கூவத்தூர் தட்சணையைப் பெற்ற இப்பேர்ப்பட்டவர்கள் மக்கள் மன்றத்தில் அம்பலமாகிவிட்டார்கள். இந்த ஊழல் கோஷ்டியுடன் இணைந்து பொதுத்தேர்தலை சந்தித்தால், நமது இமேஜ் பாதிக்கப்படும்' என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நினைக்கிறார்களாம். அதனால், 'எடப்பாடி கோஷ்டிக்குள் முட்டல் மோதல் ஏற்பட்டு அவர்களாகவே கவிழ்ந்து விடட்டும். அதுவரை குட்டையைக் குழப்பியபடி பேட்டி கொடுத்துக்கொண்டிருப்போம்' என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் ஓ.பி.எஸ் தரப்பினர். இதுதெரியாமல், எடப்பாடி கோஷ்டியினர், ''ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எந்த நேரமும் வந்து எங்களுடன் இணைவார்கள்'' என்று சொல்லித் திரிகிறார்கள். எடப்பாடி கோஷ்டியினர் தங்களை கடுமையாக விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர் முனுசாமியை, 'வில்லன்' என்கிற அடைமொழியுடன்தான் அழைக்கிறார்கள். முனுசாமியும் மீடியாவில் பேசும்போது ஏதாவது நிபந்தனைகளைப் போட்டு எடப்பாடி கோஷ்டியினரை திணறடித்து வருகிறார். 'இது இவரது வாய்ஸா அல்லது ஓ.பன்னீர்செல்வம் வாய்ஸா?' என்று குழம்பிக்கிடக்கிறார்கள் எடப்பாடி கோஷ்டியினர். ஒருவழியாக கீழே இறங்கிவந்து, 'ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி கூட தரத் தயார்' என்று எடப்பாடி கோஷ்டியினர் பந்தியில் பாயை விரித்து காத்திருக்கிறார்கள். 

தண்ணீர்

 

எஸ்.பி-யை மிரட்டும் ஏட்டையா?

நாகை மாவட்டத்தில் சுமார் 13 கோடி ரூபாய் அரசு பணத்தை கையாடல் செய்துவிட்டதாக போலீஸ் ஏட்டு ஒருவர் மீது புகார் கிளம்பியிருக்கிறது. போலீஸ் துறையில் பணிபுரிகிறவர்களின் பணம் அது! அந்த ஏட்டையா மீது நடவடிக்கை எடுக்கமுடியாமல் மாவட்ட எஸ்.பி கையை பிசைந்து நிற்கிறார். காரணம்... பல வருட பண சுருட்டல் விவகாரம். அந்த காலகட்டத்தில் அங்கே பதவியில் இருந்த அதிகாரிகளும் சிக்கலில் மாட்டுகிறார்கள். அவர்கள் இப்போது மாவட்ட எஸ்.பி-க்கு பிரஷர் கொடுத்து, 'ஏட்டையாவை விட்டுவிடச்' சொல்கிறார்களாம்.

 

தண்ணீர் கேன் பிஸினஸில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்?

டெல்டா ஏரியாக்களில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. கிராமங்களுக்கு உரிய முறையில் குடிநீர் சப்ளை செய்கிறவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள். ஆனால், இவர்களில் சிலர் தண்ணீர் லாரி பிஸினஸில் ஈடுபட்டிருக்கிறார்களாம். நல்ல வருமானமாம். இவர்களை மாவட்ட உளவுப்பிரிவு போலீஸார் லிஸ்ட் எடுத்து அரசு மேலிடத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். ஆனாலும் நோ ஆக்‌ஷன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!