வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (29/04/2017)

கடைசி தொடர்பு:16:22 (29/04/2017)

சகித்துக்கொள்ளவே முடியாத அநீதி! முதல்வர் பழனிசாமியை சாடும் சீமான்

வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளை, உடல்நலக் கோளாறு மற்றும் குடும்பப் பிரச்னை காரணமாக இறந்துள்ளதாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்த தமிழக அரசுக்கு, சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

seeman

தமிழகத்தில் பருவ மழை பொய்த்து, வறட்சியால் சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில், விவசாயிகள் குடும்பப் பிரச்னை, உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. தமிழக அரசின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து, பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. தஞ்சையில் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மை எரிக்கப்பட்டது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான், தமிழக அரசுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,' ஜெயலலிதா சிறைசென்றபோதும்  மரணமடைந்தபோதும் அவருக்காக இறந்தவர்களின் குடும்பத்தைத் தேடிப்போய் நிவாரணம் அளித்த அ.தி.மு.க அரசு, விவசாய மரணத்துக்கு நிவாரணம் தர மறுப்பது சகித்துக்கொள்ளவே முடியாத பெரும் அநீதியாகும். எனவே, வறட்சியினால் விவசாயிகள் இறக்கவில்லை எனத் தமிழக அரசு தாக்கல்செய்திருக்கும் பிரமாணப்பத்திரத்தை உடனடியாகத் திரும்பப்பெற்று, இறந்துபோன விவசாயிகளைப் பற்றிய உண்மைநிலையை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இறந்துபோன விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.