இந்தி திணிப்பை முறியடிக்க தி.மு.க தயாராக உள்ளது - மத்திய அரசிற்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

மத்திய அரசு இந்தித் திணிப்பை தொடர்ந்து மேற்கொள்ளுமானால் அதனை முறியடிக்க தி.மு.க தயாராக உள்ளது என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்னைகள் குறித்து அக்கறை காட்டாத மத்திய அரசு, பிரிந்து கிடக்கும் அ.தி.மு.கவின் இரு அணிகளையும் ஒன்று சேர்க்க முயற்சி செய்து வருகிறது. கரூர் அன்புநாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், 570 கோடி ரூபாயுடன் திருப்பூரில் பிடிபட்ட கண்டெய்னர் உள்ளிட்ட விசாரணைகள் என்ன ஆச்சு? தமிழகத்தில் நிலவும் அரசியல் பிரச்னைகளில் பா.ஜ.கவின் கை வெளிப்படையாக தெரிகிறது.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட துறைகளை பா.ஜ.க தனது தேவைக்கு பயன்படுத்துகிறது. மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படாமல் இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும். திரைப்படங்களில் இந்தி மொழி சப்டைட்டில் கட்டாயம் என்பது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும். மத்திய அரசு இந்தி திணிப்பை தொடர்ந்து மேற்கொள்ளுமானால் அதனை முறியடிக்க தி.மு.க தயாராக உள்ளது' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!