'அ.தி.மு.க ஆட்சியில் அழுகிப்போன அரசு நிர்வாகம்' - ஸ்டாலின் குற்றச்சாட்டு!

அ.தி.மு.க ஆட்சியில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயுள்ளநிலையில், 1570 கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்திட்டிருப்பதாகக் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

stalin

அண்மையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, '73 நாட்களில் 1570 கோப்புகளில் கையெழுத்துப் போட்டிருக்கிறேன். எந்தக் கோப்பும் நிலுவையில் இல்லாத வண்ணம் அரசு நிர்வாகம் தொய்வின்றி நடைபெற்றுவருகிறது' எனக் கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எத்தனை முக்கிய திட்டங்களுக்கு இந்த கோப்புகள்மூலம் அனுமதி கொடுத்திருக்கிறார், இது வரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களையும் முதல்வர் பேசியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால், 'கோப்புகளில் கையெழுத்திட்டேன்' என்று முதலமைச்சர் பேசியதிலிருந்தே அந்த கோப்புகள் வழக்கமான கோப்புகள்தான் என்பது தெரிகிறது. 

tamilnadu

மேலும் இதுகுறித்த தனது அறிக்கையில், 'நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்யப்பட்டு இரு மாதங்கள் நெருங்கப்போகும் வேளையிலும் கூட துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளை விவாதிக்க சட்டமன்றத்தின் கூட்டத்தைக் கூட்டாத முதலமைச்சர், தமிழக அரசு நிர்வாகம் தொய்வின்றி நடக்கிறது என்று கூறியிருப்பதை இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாகவே நான் கருதுகிறேன். ஆகவே, அ.தி.மு.க ஆட்சியில் அழுகிப்போன அரசு நிர்வாகத்தை இதுபோன்ற 'பகட்டான' பேச்சுக்கள்மூலம் மறைக்க முயலாமல், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் மக்கள் குறை தீர்க்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதலமைச்சர் தனது கையெழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!