கெஜ்ரிவாலின் வாழ்த்து எனக்கு தேவை! சொல்கிறார் கபில் மிஷ்ரா | I need blessings from kejriwal, says kapil mishra

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (09/05/2017)

கடைசி தொடர்பு:13:09 (09/05/2017)

கெஜ்ரிவாலின் வாழ்த்து எனக்கு தேவை! சொல்கிறார் கபில் மிஷ்ரா

'ஊழல், லஞ்சத்துக்கு எதிராகப் போராடிவரும் நான் வெற்றிபெற, அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்த வேண்டும்' என ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஷ்ரா கூறியுள்ளார்.

கபில்

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கபில் மிஷ்ரா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டு, பலத்த விவாதங்களைக் கிளப்பிவருகிறது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கட்சியின் முக்கியத் தலைவரிடமிருந்து இரண்டு கோடி ரூபாய் வாங்கியதை நேரடியாகவே பார்த்தேன்’ என அவர் கூறினார். மேலும், கெஜ்ரிவால் உட்பட, ஆம் ஆத்மி முக்கிய தலைவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். இது, டெல்லி அரசியலை அதிரவைத்தது.

இதனிடையே, 'ஊழலுக்கு எதிரான எனது போராட்டத்தை கெஜ்ரிவால் வாழ்த்த வேண்டும்' என, கபில் மிஷ்ரா கூறியுள்ளார். இதுகுறித்து இன்று டெல்லியில் பேசிய அவர்,' ஊழலுக்கு எதிராகப் போராட எனக்கு கற்றுக்கொடுத்த குரு, கெஜ்ரிவால். ஆனால், இன்று அவருக்கு எதிராகவே நான் போராடும் சூழல் எழுந்துள்ளது. ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நான் வெற்றிப்பெற, கெஜ்ரிவால் மனமுவந்து வாழ்த்த வேண்டும்' என்று கூறியுள்ளார். மேலும் 'ஆம் ஆத்மி தலைவர்கள், அவர்களின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்களின் விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், உண்ணாவிரதம் இருப்பேன்' என்றும் கபில் மிஷ்ரா கூறியுள்ளார்.