Published:Updated:

எடப்பாடி பழனிசாமி திட்டம் என்னாச்சு...? மணல் வியாபார மல்லுக்கட்டுகள்

எடப்பாடி பழனிசாமி திட்டம் என்னாச்சு...? மணல் வியாபார மல்லுக்கட்டுகள்
எடப்பாடி பழனிசாமி திட்டம் என்னாச்சு...? மணல் வியாபார மல்லுக்கட்டுகள்

“மணல் விற்பனையை இனி அரசே நடத்தும்; மூன்று ஆண்டுகளில் மணல் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும்'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 2003-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மணல் விற்பனையை தனியாரிடமிருந்து எடுத்து அரசுடமை ஆக்கினார். அப்போது முதலில் 2 யூனிட் மணல் 1,000 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், 6 மாதங்கள் கழித்து 2 யூனிட் மணல் 600 ரூபாய் என்று மாற்றி அமைக்கப்பட்டது. 6 டயர் கொண்ட லாரியில் மூன்று யூனிட் மணல் ஏற்றிச் செல்லவும் அனுமதியளிக்கப்பட்டு வந்தது.

பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை, தொழில் துறை, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இந்தத் தொழிலை செய்துவந்தன. 2005-ம் ஆண்டு சில நெருக்கடிகள் காரணமாக, லோடிங் தொழிலிலிருந்து மணல் லாரி உரிமையாளர்கள் ஒதுங்கிக்கொண்டனர். அந்த லோடிங் தொழிலில் கோவை ஆறுமுகச்சாமி உள்ளே வந்தார். அதன் பின்னர், மணல் தொழில் வேறுதிசையை நோக்கிச் சென்றது. டிடி மூலம் மணலுக்கான தொகையைக் கொடுத்து வந்ததில் மாற்றம் ஏற்பட்டது. கோவை ஆறுமுகச்சாமியும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களும் கல்லா கட்ட ஆரம்பித்தனர்.

மணல் வருவாய் மட்டும் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசு கஜானாவுக்கு வர வேண்டும். ஆனால், வெறும் 200 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே அரசு கணக்கில் சேர்க்கப்பட்டது. மீதிப்பணம் எல்லாம் தனிநபர்களுக்குப் போய்க்கொண்டிருந்தது. எனவேதான், மணல் வியாபாரத்தை அரசே ஏற்று முறையாக நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. கடந்த பிப்ரவரி 20-ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்று முதல் முறையாக நிருபர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், ''மணல் வியாபாரம் அரசுடமை ஆக்கப்படுமா...?" என்று நிருபர் ஒருவர் கேட்டார். ஆனால், பதில் எதுவும் சொல்லாமலேயே பேட்டியை முடித்துக் கொண்டு கிளம்பினார் முதல்வர்.

அப்படிப்பட்ட, எடப்பாடி பழனிசாமிதான் கடந்த மே 5-ம் தேதி மதுரையில் நடந்த விழாவில், “அரசே மணல் விற்பனையை முழுமையாகச்  செய்யும்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார். முதல்வரும் அவர்தான், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் அவர்தான். மே 1-ம் தேதியிலிருந்து 80-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. சென்னைக்கு மட்டும் ஒரு நாளைக்கு வர வேண்டிய 4,000 லாரி லோடு மணல் தடைபட்டுள்ளதால், கட்டுமானப் பணிகள் அரைகுறையாக நிற்கின்றன; இதனால் தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், மணல் விற்பனையை அரசே நடத்திட முடியுமா? என்பது குறித்து நம்மிடம் பேசிய 'சிவில் என்ஜினீயர்ஸ் ஃபோரம்' பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, ''குவாரிகளில், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளிப்போடும் லோடிங் காண்ட்ராக்டர் மணலை லாரியில் ஏற்றி விடுவர். இவர்கள் லாரிகளின் கொள்ளளவு உயரத்தைத் தாண்டி மணலை ஏற்ற வழிவகை செய்தனர். அதற்காக அரசு நிர்ணயித்த தொகையினைக் காட்டிலும் கூடுதலாக அதாவது மூன்று யூனிட் மணலுக்கு 2,000 ரூபாய் என வசூல் செய்தனர். இதில் அரசுக்கு சேர வேண்டிய 650 ரூபாய் போக மீதம் லோடிங் காண்ட்ராக்டருக்குப் போய்ச் சேர்ந்துவிடும். மேலும், லோடு போடும் லாரிகளின் எண்ணிக்கையையும் மிகப்பெருமளவில் குறைத்துக் காட்டினர். இதனால் அரசுக்கு முறையான லோடு கணக்குத் தராமல் மொத்த வருமானத்தையும் தனதாக்கிக் கொண்டனர் இந்த காண்ட்ராக்டர்கள்.

இதில் அதிகாரிகளின் அறிவும் பெரும் பங்காற்றியுள்ளது. வெளிப்படையான ஒட்டுமொத்த டெண்டர் கோரினால், இதுபோன்ற 'தனிநபர் குடையின் கீழ் மணல் வியாபாரம் செய்து மாபெரும் கொள்ளை நடத்தி பயனடைய முடியாது' என்பதால், டெண்டர் விதிமுறைகளை தங்களுக்குச் சாதகமாக மிக சாதுர்யமாக பயன்படுத்தினர். இந்த லோடிங் ஒப்பந்தங்கள் விரைவாகச் செய்ய வேண்டும் என்பதைக் காரணம் காட்டி, ஒரு குவாரிக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் லோடுகளின் அடிப்படையில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் ஒப்படைக்கப்பட்டன. மேலெழுந்தவாரியாக பார்த்தால் இது நிர்வாகத்துக்கு எளியது; விரைவாக பணி நடைபெற ஏதுவானதாகவும் தோன்றும். ஆனால், எல்லோரது கண்களிலும் மண்ணைத் தூவி கொள்ளையடிக்க இது மிகச்சிறந்த வழி'' என்று ஊழலின் ரகசியங்களை எடுத்துச் சொன்னவர், அதிகாரிகள் துணையோடு நடந்த மோசடிகளையும் அடுக்க ஆரம்பித்தார்.

''மணல் குவாரிகளுக்கு உடனடியாக எந்திரங்கள் தேவை என்பதாலும், அதற்கான பணப்பட்டுவாடா உடனே நடைபெறவும், லோடிங் ஒப்பந்தப்புள்ளி ஒட்டுமொத்தமாக பெரியளவில் கோராமல் சிறு சிறு ஒப்பந்தகளாக உடைத்துக் கோரப்பட்டது. அதாவது, ஒரு நாளைக்கு ஆயிரம் லோடு எனக் கணக்கிட்டால் மதிப்பீடு ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம். அதனையே ஒரு மாதத்துக்கு என்றால், நாற்பத்தைந்து லட்சம் ரூபாய். ஒரு வருடத்துக்கு என்றால், ஐந்து கோடி ரூபாய்! ஒரு வருடத்துக்கு ஒப்பந்தம் கோர வேண்டும் என்றால், தலைமைப் பொறியாளர் கோர வேண்டும். தொகையின் அடிப்படையில் பார்த்தால், ஒரு மாதத்துக்கு ஒப்பந்தம் கோர வேண்டும் என்றால் கண்காணிப்பு பொறியாளர்  கோர வேண்டும். ஆனால், ஒரு நாள் அடிப்படையில் மதிப்பீடு தயாரித்து ஒப்பந்தம் கோரினால் செயற்பொறியாளருக்கே அதிகாரம் உள்ளது.

மிகச் சிறிய ஒப்பந்தங்கள், அந்த அலுவலக சுற்றறிக்கை அளவில் தெரிவித்தால் போதும். அதைச் செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்த தேவையில்லை. அதாவது அந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்புகள் ஒரு குறுகிய வட்டத்தில், இன்னும் குறிப்பாக... யாருக்கு அவர்கள் தெரிவிக்க வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் தெரிவிக்க வழிவகை செய்யும். இப்படித்தான் லோடிங் காண்ட்ராக்ட் மொத்தமாக ஒரே நபரிடம் அவர் குறிப்பிடும் பெயர்களில் ஒப்படைக்கப்பட்டு மணல் கொள்ளை நடைபெற ஆரம்பித்தது'' என்றவர் தொடர்ந்து தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடுகளையும் பட்டியல் போட்டார்.

''2006 -ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க-வின் முக்கிய வாக்குறுதியே மணல் கொள்ளையை முற்றிலும் தடுப்போம் என்பது தான். அவர்களும் ஆட்சிக்கு வந்தார்கள். கடந்த ஆட்சியில் மணல் மாஃபியா செய்த மணற்கொள்ளைகளைத் தடுத்தார்கள். எப்படியென்றால் ஏற்கெனவே இருந்த மணல் கொள்ளையரை மாற்றி வேறு ஒருவரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அவர் சரிவர இயங்கவில்லை என்று மீண்டும் பழைய நபருக்கே மணல் குவாரிகள் வழங்கப்பட்டன. மீண்டும் வந்த பழைய மணல் புள்ளி, இந்த முறை லாரிகள் ஆற்றுப் படுகைக்குச் செல்வதை முற்றிலுமாகத் தடுத்து தன் லாரிகளை மட்டுமே உள்ளே அனுப்பி மணலை ஏற்றிவந்து ஆற்றின் நுழைவில் அதைச் சேமித்துவைத்தார். பின்னர் மணல் வேண்டும் என வந்து நிற்கும் லாரிகளுக்கு அந்த சேமிப்புக் கிடங்கிலிருந்து மணலை ஏற்றி விட்டார். இதற்கு விலையினை நிர்ணயிக்கும் அதிகாரம் முற்றிலுமாக அவரிடமே இருந்தது.

தொடர்ச்சியாக இத்தகைய முறையில் கொள்ளையிடும் உரிமையினை தக்க வைக்கும் வழிமுறையாக, செகண்ட் சேல் (SECOND SALES) என்கிற இரண்டாம் விற்பனை முறைக்கு ஒரு அரசு ஆணை 2011-ம் ஆண்டு ஜனவரியில் இயற்றப்பட்டது. ஆற்றுப் படுகையில் உள்ள மணலை பொதுப்பணித் துறையிடமிருந்து பெற்று இரண்டாம் விற்பனையாக முறையாக லாரிகளுக்கு விற்பதாகச் சொல்லப்படுவதில் தவறு இல்லை என்பதுபோல் தோன்றும். ஆனால், உண்மையில் அவரது லாரிகள் தவிர வேறு எவரும் ஆற்றில் சென்று பொதுப்பணித்துறையிடம் மணல் பெற முடியாது என்பதுதான் இதில் உள்ள சூட்சுமம்'' என்று விளக்கியவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன எம் சான்ட் பற்றியும் பேசினார்.

''மணலுக்குப் பதில் கல் அரவைத் துகள்கள் (QUARRY/CRUSHER DUST) அரசுப் பணிகளில் பயன்படுத்தலாம் என தமிழகப் பொதுப்பணித்துறை ஏற்கெனவே ஆணை பிறப்பித்துள்ளது. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'எம் சான்ட் (M SAND)' எனப்படும் தயாரிப்பு மணல் பற்றி அறிவித்துள்ளார். எம் சான்ட் தயாரிக்க எத்தனை மலைகளை உடைப்பது? வனத்தில் வாழும் பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட இயற்கையின் நிலை என்ன? கல்லை மணல் ஆக்க மின்சாரம் தேவை. மின் தட்டுப்பாடு உள்ள மாநிலத்தில் இதெல்லாம் சாத்தியமாக வாய்ப்பே இல்லை. வெளிமாநிலங்களுக்குக் கொண்டுபோவதைத் தடுக்க வேண்டும். தமிழகத்தின் தேவைக்கு மட்டுமே மணல் எடுக்க வேண்டும். சட்டதிட்டங்களை முறையாகப் பின்பற்றி மணல் விற்றால் தமிழக அரசுக்கு 20 ஆயிரம் கோடி முதல் 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். இன்னும் காலம் தாழ்த்தாமல் உரிய விதிகளை வகுத்து உடனே மணல் குவாரிகளை திறக்க வேண்டும். மணல் வியாபாரத்தில் நடக்கும் மறைமுக மல்லுக்கட்டுகளை அப்படியே தூக்கி எறிய வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி'' என்று விரிவாகச் சொல்லிமுடித்தார்.