வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (13/05/2017)

கடைசி தொடர்பு:18:10 (13/05/2017)

பயன்தருமா பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம்?

மோடி இலங்கை பயணம்

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்று திரும்பியுள்ளார். அவரது பயணத்தின் முக்கிய நோக்கமே இந்தியா - இலங்கை இடையேயான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாகும்.

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச புத்தமத மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியபோது, இந்தியாவும், இலங்கையும் புத்தரின் போதனைகளை உலகம் முழுவதும் கொண்டுசென்றதாகத் தெரிவித்தார். இந்தியாவில் புத்தர் முதன்முதலில் பேசிய வாரணாசிக்கும், கொழும்பிற்கும் இடையே வரும் ஆகஸ்ட் மாதத்தில் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து இந்தியா திரும்புவதற்காக, விமான நிலையத்திற்கு அவர் சென்றபோது, வழிநெடுகிலும் குழுமியிருந்த மக்கள் அளித்த வரவேற்பால் அவர் நெகிழ்ந்து போனார். தனக்கு உற்சாக வரவேற்பு அளித்த இலங்கை மக்களுக்கு, காரில் இருந்தவாறே பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

இந்தியாவுக்குப் புறப்படும் முன், மத்திய மாகாணத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், இந்தியா உதவியுடன் மேலும் 10 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்தார். இந்தியாவின் நிதியுதவியுடன் தற்போது இலங்கையில் நான்காயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவுடனான இலங்கையின் சமூக - பொருளாதார நல்லுறவுகள் மேலும் வலுப்படும் வகையில், அப்பகுதி மக்களுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என்றும், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் மிகக் கடும் சோதனைகளை எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மோடி இலங்கை பயணம்இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட மருத்துவமனையையும் பிரதமர் திறந்து வைத்தார். இலங்கையில் இரண்டுநாள் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் டெல்லி திரும்பினார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நாடான இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவை அளிக்கத் தயாராக உள்ளது என்று பிரதமர் உத்தரவாதம் அளித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள், பன்னெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது என்றும் மோடி குறிப்பிட்டார். இலங்கையுடனான நட்புறவை மேம்படுத்திக்கொள்ள அண்டை நாடான சீனா தீவிரம் காட்டிவரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியாதான் மிக நெருக்கமான நாடு என்பதை பறைசாற்றும் வகையில் பிரதமரின் இந்தப் பயணம் அமைந்தது என்றே கூறலாம். 

என்றாலும், பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம் அங்கு வாழும் தமிழர்களுக்கு நன்மையைக் கொண்டுவருமா என்பது சந்தேகமே என இலங்கைத் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மோடியின் இந்தப் பயணத்தால், இந்தியா - இலங்கை இடையே நல்லுறவு மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் அதேவேளையில். அங்குவசிக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பிரதமராகப் பதவியேற்ற பின் இலங்கைக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டது இது இரண்டாவது முறையாகும். பிரதமராகப் பதவியேற்ற பின்னர் மோடி, கடந்த 2015-ம் ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்