போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம்: விஜயபாஸ்கரை வன்மையாக கண்டிக்கும் ஜி.ராமகிருஷ்ணன்

அரசியல் ஆதாயத்துக்காக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதற்கு ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜி.ஆர்

திருச்சி வெண்மணி தியாகிகள் இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் சகிதமாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அரசியல் ஆதாயத்துக்காக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 7 முறை பேச்சு நடத்தி வேறு வழி இல்லாமல் இன்று போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு அரசு எப்படிச் செயல்படக் கூடாது என்பதற்குச் சிறந்த உதாரணம் அ.தி.மு.க அரசு தான்'' எனக் கூறியுள்ளார்.

மேலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது அரசுப் பேருந்துகளை வெளியாட்களை வைத்து இயக்க முயற்சி எடுப்பது விபரீத விளைவுகளை உருவாக்கும். விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படும். எனவே அத்தகைய முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. இப்படியிருக்கப் போராட்டத்தை ஒடுக்கக் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாமல் போராட்டத்தை ஒடுக்க அரசு நினைத்தால் அரசியல் கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவாகப் போராட வேண்டிய நிலை உருவாகும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!