வெளியிடப்பட்ட நேரம்: 05:56 (18/05/2017)

கடைசி தொடர்பு:08:36 (18/05/2017)

டெல்லி தனிகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது தினகரனின் ஜாமீன் மனு!

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டி.டி.வி.தினகரன் ஜாமீன் கேட்டு டெல்லி தனிக்கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

தினகரன்

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான நீதிமன்றக் காவலை வருகிற 29-ம் தேதி வரை நீடித்து கடந்த திங்கட்கிழமை நீதிபதி பூனம் சௌத்ரி உத்தரவிட்டார்.

இந்நிலையில், தினகரன் சார்பில் ஜாமீன் கோரி தனிக்கோர்ட்டில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தினகரன் சார்பில் வழக்குரைஞர்கள் நவீன் மல்ஹோத்ரா, ஜெக்தீப் ஷர்மா ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்தனர். 

'டெல்லி போலீஸார் பதிவு செய்துள்ள இந்த வழக்கு தொடர்பான சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டுள்ள தினகரனுக்கு எந்தவகையிலும் தொடர்பு கிடையாது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் என்ற நபர், அனைவரும் அறிந்த பிரபலமான மோசடி பேர்வழி. ஏற்கெனவே அவர் மீது பல மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற ஒரு நபர் அளித்த வாக்குமூலத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தினகரனை கைது செய்திருப்பது தவறானதாகும். இந்த வழக்கு தொடர்பாக தினகரனுக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியதும் அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். அவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான அத்தனை விளக்கங்களையும் அவர் டெல்லி போலீஸுக்கு அளித்து இருக்கிறார். இனி அவரை நீதிமன்றக் காவலிலோ அல்லது போலீஸ் காவலிலோ வைத்து விசாரிக்க எந்த முகாந்திரமும் கிடையாது.

தினகரனின் வீடு மற்றும் அலுவலகத்தில் போலீஸார் ஏற்கனவே சோதனைகள் மேற்கொண்டு உள்ளனர் . எனவே அவரால் கலைக்கக்கூடிய எந்த ஆதாரமும், சாட்சியமும் தற்போது இல்லை. மேலும், சிறையில் அவருடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தினகரனை நீதிமன்றக் காவலில் இருந்து விடுவித்து அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.' என அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. இதேபோல் மல்லிகார்ஜூன் சார்பிலும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரிகளை சி.பி.ஐ ஆய்வு மையத்தில் ஆய்வு செய்ய அனுமதி கோரி டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ள மனுவும் இன்று  நீதிபதி பூனம் சவுத்திரி முன்பு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்