ஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!

எடப்பாடி பழனிசாமி

ரசியல் மேடைகளில் குட்டிக்கதை சொல்லி எதிரிகளுக்கு சூசகமாக பதிலடி கொடுப்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைல்! இப்போது எடப்பாடி பழனிசாமியும் அதைப் பின்பற்றி வருகிறார். ஊட்டியில் 121-வது மலர்க் கண்காட்சியை தொடங்கி வைக்க வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்ஸுக்கு குட்டிக் கதை மூலம் குட்டு வைத்தார்.

தாவரவியல் பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "நீலகிரி மாவட்டம் கொடுத்துவைத்த மாவட்டம். முன்னாள் முதல்வர் அம்மா, அதிகமுறை நீலகிரிக்குத்தான் வந்திருக்கிறார். மலைகளின் ராணி என்றழைக்கப்படும் நீலகிரி மலையை யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தபோது, இப்பகுதிக்கு மகுடம் சூட்டியது அம்மாதான். எக்கச்சக்கமான திட்டங்களை நீலகிரிக்கு கொடுத்துள்ளார்.  அம்மாவின் வழியில் நானும் நிறைய திட்டங்களை இங்குள்ள மக்களுக்காக செயல்படுத்த தயாராக இருக்கிறேன். நான் இங்கு வந்தபோது உதகை பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை வைத்தார்கள். உதகை பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று இந்த மேடையில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஸ்பாட் ஆஃபராக பஸ் ஸ்டாண்டுக்கு நிதி ஒதுக்கிய முதல்வர், பின்னர் ஓ.பி.எஸ் பக்கம் திரும்பினார்..

"எந்த அரசு, மக்களின் பக்கம் இருக்கிறதோ அந்த அரசின் பக்கம் மக்களும் இருப்பார்கள். கடவுளும் இருப்பார். அம்மாவின் இந்த அரசு, மக்களின் ஆதரவு பெற்ற அரசாகவும், கடவுளின் ஆசிபெற்ற அரசாகவும் இருக்கிறது"  என்று குறிப்பிட்ட அவர், குட்டிக் கதை ஒன்றைச் சொன்னார். 

"பக்தன் ஒருவன் கடும் தவம் புரிந்தான். கடவுள் கதாயுதத்தோடு அவன்  முன்னே காட்சியளித்து, 'பக்தா. உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என்றார். அதற்கு, அந்த பக்தன், 'கடவுளே.. என் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் எதிரிகளை உங்கள் கதாயுதத்தால் அழித்தொழிக்க வேண்டும்' என்றான். கடவுளும் 'அப்படியே ஆகட்டும்' என்றார். கதாயுதத்தை வீசினார் கடவுள்... கதாயுதம் பறந்து வந்து, அந்த பக்தனின் நெஞ்சைத் தாக்கியது. பக்தன் அதிர்ச்சியாகி, 'கடவுளே என்ன இது?' என்று கேட்டுத் திகைத்தான். கடவுள் அவன் முன்பு மீண்டும் தோன்றினார், 'உங்கள் கதாயுதம் கொண்டு என் எதிரிகளை அழிக்கச் சொன்னால், அது என்னையே வந்து தாக்குகிறதே' என்று கேட்டான். அதற்குக் கடவுள் சொன்ன பதில், 'பக்தா உன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பது,  அடுத்தவனை அழித்து, நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் உன் மனம்தான். உன் மனம்தான் உனக்கு பகை' என்றார். அப்படித்தான், இங்கு  தர்மத்தைப் பற்றி பேசுகிறவர்கள், அதர்மம் செய்தால் மக்கள் கதாயுதம் ஏந்திவந்து அடிப்பார்கள்" என்றார். தொடர்ந்து பேசியவர், "இன்னொரு செய்தி கேள்விப்பட்டேன், நான் யாரோ ஒருவரால் வளர்க்கப்பட்டதாக பேசுகிறார்களாம். நான் யாராலும் வளர்க்கப்படவில்லை. நான் அம்மாவால் வளர்க்கப்பட்டவன். நான் மட்டுமல்ல; இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அத்துணை பேரும் அம்மாவால் வளர்க்கப்பட்டவர்களே.." என்று உரையை நிறைவு செய்தார் பழனிசாமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!