ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் மண்டை உடைப்பு! சசிகலா ஆதரவாளர் வெறிச்செயல்

ஓ.பி.எஸ்- சசிகலா அணியினரிடையே நடைபெற்ற மோதலால் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

ஓபிஎஸ்

வடசென்னை மாவட்டம்,  ஆர்.கே.நகர்த் தொகுதியைச் சேர்ந்தவர் எஸ்.அறிவழகன். அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருக்கிறார். தண்டையார்பேட்டை கோதண்டராமர் தெரு வழியாக நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் அறிவழகன் வந்தபோது, அவரை பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சூழ்ந்து, ஆயுதங்களால் தாக்கினர். இந்தத் தாக்குதலில் அறிவழகன் மண்டை உடைந்து அதே இடத்தில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள்  அறிவழகனை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீஸில் அறிவழகன் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில்,  "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணியின் வெற்றிக்காக நான்  தீவிரமாக தேர்தல் பணியாற்றினேன். என் மீதும், எங்கள் அணி மீதும் கோபத்தில் இருக்கும் சசிகலா ஆதரவாளரான  வட்டச் செயலாளர் லோகு, இதனால் என்னை எதிரியாக கருதினார். என்னைப்  பழிவாங்க தீவிர முயற்சி செய்தார். நேற்றும் அதே எண்ணத்துடன் வீட்டுக்கு வரும் வழியில் கூலிப்படையை  வைத்து  என்னைத்  தாக்கினார். இது திட்டமிட்ட சதி. சம்பவம் குறித்து போலீஸார், தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது ஓ.பி.எஸ். அணியின் ஆதரவு வட்டச்செயலாளர் நித்யானந்தமும் இதேபோல்தான் சசிகலா அணியினரால் தாக்கப்பட்டார். இடைத்தேர்தலும் நின்று போனது. உள்ளாட்சித் தேர்தல் வருவதற்குள் ஆர்.கே.நகர் தொகுதியில் இப்படி பல வெட்டு, குத்து சம்பவங்கள் நடக்கலாம் என்ற சூழ்நிலையால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!