Published:Updated:

நளினியால் விடுதலை ஆனார் 'பக்கா' விஜயா!

24 வருட சோகக் கதை!

##~##

நளினி இன்னும் விடுதலை ஆகவில்லை. ஆனால், அவர் முயற்சியால் ஒரு அப்பாவிப் பெண் விடுதலை ஆகிவிட்டார்!

 ''இந்த சிறையில் 'பக்கா’ என்ற விஜயா என்று ஒரு கைதி கடந்த 24 ஆண்டுகளாக இருக்கிறாள். கழைக்கூத்தாடியான அவளது நடனத்தினால் கவரப்பட்ட ஒருவர் அவளைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவருடைய வீட்டில் சாதியைக் காரணம்காட்டி, திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு இருவரும் கழைக்கூத்து நடத்தி பிழைத்தனர். ஒருநாள் இரவு ரோட்டோரத்தில் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் ஒருவன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளான். கணவன், மனைவி இருவரும் அவனைக் கல்லால் அடித்து விரட்டினர். காயம்பட்ட அவன் இறந்துவிட்டான். இவர்களைக் கைதுசெய்த போலீஸ், 500 ரூபாயைத் திருடுவதற்காக இவர்கள் அவனைக் கொலை செய்தார்கள் என்று குற்றம்சாட்டி சிறையில் அடைத்தனர். இரண்டு பேரும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கின்றனர். அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டு, குழந்தையைப்போல் உளறிக் கொண்டிருக்கிறாள். ஒட்டுமொத்த சிறைக்கும் அவள்தான் செல்லப்பிள்ளை. இப்போது

நளினியால் விடுதலை ஆனார் 'பக்கா' விஜயா!

என்னுடைய விடுதலையைவிட  அவளுடைய விடுதலைக்காகத்தான் அதிகமாக என் வழக்கறிஞரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்''

- கடந்த வாரம் ஜூ.வி-க்கு அளித்த பேட்டியில் இப்படிக் கூறியிருந்தார் வேலூர் சிறையில் இருக்கும் நளினி. இந்த நிலையில் விஜயா, கடந்த 20-ம் தேதியன்று விடுதலையாகி இருக்கிறார்.

வேலூரில் உள்ள ஓ.ஆர்.டி. பெண்கள் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார் விஜயா. இவரின் விடுதலைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம்.

''நளினியின் வழக்குத் தொடர்பாக வேலூர் பெண்கள் சிறைக்குச் சென்றபோதுதான், என்னிடம் விஜயாவை அறிமுகப்படுத்தினார். 'இவங்க கஷ்டப்படுறாங்க. இவரை விடுதலை செய்றதுக்கு முயற்சி எடுங்க’னு சொன்னார். இவர் வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமா வாங்கினேன். மேலும், 'சிறைக் கைதிகள் உரிமை மையம்’ என்ற எங்கள் அமைப்பு மூலமாக... தமிழ்நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்கள் பற்றிக் கணக்கெடுத்தேன். அதில், பெண்களில் அதிகமான ஆண்டுகள் சிறையில் இருப்பது 'பக்கா’ விஜயா மட்டும்தான். அவருடைய விடுதலைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்குப் போட்டேன். 30 வாய்தாக்கள் கடந்து, 2012 பிப்ரவரி மாதம் 'இவரின் முன் விடுதலைக்காகப் பரிந்துரை செய்யப்பட்ட கோப்பு அனைத்தும் உள்துறை செயலாளருக்கு அனுப்பட்டுள்ளது’ என தகவல் கொடுத்தனர். அதிகாரிகளுக்கு அக்கறை இல்லாததால், விஜயாவின் விடுதலைக்கான கோப்பு உள்துறை செயலாளர் அலுவலகத்தில் உறங்கியது. கடந்த வாரம் இளங்கோ என்பவர் வழக்கில் விடுதலை செய்யச் சொல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன் பிரகாசம், சிறைத் துறைக்கு வழங்கி இருந்த உத்தரவைச் செயல்படுத்தாமல் காலதாமதம் செய்தது, நீதிமன்ற அவமதிப்பாக மாறியது. விஜயா கேஸில் பிரச்னை வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் 20-ம் தேதி காலையிலேயே விஜயாவை அவசர அவசரமாக விடுதலை செய்துவிட்டனர்.

கழைக்கூத்தாடியான விஜயாவிடம் காதல் கொண்டார் கோயம்புத்தூர் மாவட்டம் நாச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன். இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். அதன்பிறகு விஜயாவோடு சேர்ந்து அவரும் கழைக்கூத்தாடி வாழ்க்கை நடத்தினர். சுப்ரமணியன், 'நாங்கள் ஒருநாள் தெருவோரத்தில் தூங்கியபோது விஜயாகிட்ட, ஒருத்தன் தவறாக நடந்துக்க முயற்சி செஞ்சான்.

நளினியால் விடுதலை ஆனார் 'பக்கா' விஜயா!

அவனை எதிர்த்து நடந்த சண்டையில இறந்திட்டான்’னு சொல்கிறார். இது சம்பந்தமாக திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சூலூர் காவல் நிலையத்தில் 1990-ம் ஆண்டு வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு, 91-ம் ஆண்டில் 500 ரூபாய் வழிப்பறி மற்றும் கொலைக் குற்றத்துக்காக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது, கோவை நீதிமன்றம். கணவன், மனைவியாக இருந்ததால் இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பல ஆண்டுகளாகச் சிறையில் இருந்ததால்... மனநிலை பாதித்து, பேச முடியாமல் இருக்கிறார் விஜயா. இவருடைய வழக்கை எடுத்து நடத்த ஆட்கள் இல்லாததால்தான் இவ்வளவு நாட்கள் சிறையில் இருந்தார். அடுத்து அவருடைய கணவரின் முன்விடுதலைக்காக வழக்குப்போட இருக்கிறேன்'' என்றார்.

வேலூர் பெண்கள் சிறையில், கைதிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்துவரும் மனோதத்துவ நிபுணர் ஒருவரிடம் பேசினோம். ''விஜயாவுக்கு 60 வயதாகிறது. நான், அங்கே போவதற்கு முன்பே மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். 'மாமா... பாஸு... டாட்டா’ இந்த மூன்று வார்த்தைகள் மட்டும்தான் பேசுவார். சின்ன குழந்தை மாதிரி நடந்துகொள்வார்'' என்றார்.

விஜயா விடுதலை பற்றி வேலூர் பெண்கள் சிறையின் காவல் கண்காணிப்பாளர் ராஜலெஷ்மியிடம் பேசியபோது, ''91-ம் ஆண்டு வேலூர் சிறைக்கு வந்துள்ளார். இவரின் செயல்பாடுகளைப் பார்த்து, நாங்கள் பரிந்துரை செய்திருந்த விடுதலைக்கான ஆவணங்கள் கையெழுத்தாகி வருவதற்குத் தாமதமான நிலையில்... புகழேந்தி வழக்கு தொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.

விஜயா, விடுதலை ஆகிவிட்டார். அடுத்து குணம் அடைய வேண்டும்!

- காசி.வேம்பையன்

படங்கள்: ச.வெங்கடேசன்

பின் செல்ல