Published:Updated:

'பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர்

'பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர்
'பல்கலை’ஞர் கருணாநிதி - மினி தொடர்

1. பத்திரிகையாளர்

பள்ளி மாணவராக இருந்தபோதே பத்திரிகையாளர் அவதாரம் எடுத்தவர் கலைஞர் கருணாநிதி. சொல்லப்போனால், அதுதான் அவருடைய நீண்டநெடிய அடையாளமும்கூட.  15 வயதில் `முரசொலி' இதழைத் தொடங்கினார். அப்படிப் பார்த்தால், சுமார் 80 ஆண்டுப் பயணம் அவருடைய பத்திரிகை ஆசிரியர் பணி. பேச்சாளர், நாடக நடிகர், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, படத் தயாரிப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதலமைச்சர் எனப் பன்முகம்கொண்ட ஓர் அரசியல் தலைவர் கருணாநிதி. ஐந்து முறை முதலமைச்சர், ஐந்து முறை எதிர்க்கட்சித் தலைவர், 74 திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைத்தவர், 60 ஆண்டுகளாக ஒரு கட்சியின் தலைவர் என ஏற்பதையெல்லாம்  சாதனைகளாக நிகழ்த்திக்காட்டியவர். அவருடைய பத்திரிகை ஆசிரியர் பயணம், நீண்டநெடிய தூரங்களைக் கடந்தது. கருணாநிதி - தயாளு அம்மாள் திருமணப் பத்திரிகையில், `மு.கருணாநிதி முரசொலி ஆசிரியர்' என்றே பதித்திருந்தார். முத்தாரம், வண்ணத்திரை, குங்குமம் இதழ்களில் பணிபுரிந்த காலங்களில், அவரை தினமும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் என அரசியலில் அவர் பொறுப்புகள் மாறும். ஆனால், 'முரசொலியி'ல் அவர் பத்திரிகை ஆசிரியராக, தினமும் அலுவலகத்துக்கு வந்து செல்வது மட்டும் மாறவே இல்லை.


கடிதம் எழுதுவார். வரைந்து தரும் கார்ட்டூனில் திருத்தம் சொல்வார். முந்தைய நாள் வந்த எழுத்துப் பிழைகளுக்காகப் பிழைதிருத்துநர்களை அழைத்துக் கண்டிப்பார்.  முதுமை காரணமாக, கண்டிப்பது என்பது ஒருகட்டத்தில் அவரால் முடியவில்லை. கையில் ஒரு ஸ்கேல் வைத்திருப்பார். பிழைதிருத்தத்தில் பிழை செய்தவர், கையை நீட்டவேண்டும். செல்லமாக ஓர் அடி கொடுப்பார். இது சில நாள்கள் நடந்தது. அதன் பிறகு, அவர் எழுதிக்கொண்டிருக்கும் பேனாவைத் தவறு செய்தவர்களின் சட்டையை நோக்கி உதறுவார். அதுதான் தண்டனை. பிழைசெய்தவர்களோ அதைப் பெருமையாக வந்து மற்றவர்களிடம் காட்டுவார்கள். மோதிரக் கையால் குட்டு வாங்கியதுபோல.

ஒரு கட்சி ஏடு... அதற்கு அவர் செலுத்தும் கவனம் ஆச்சர்யமானதுதான். சில நேரங்களில் அவசரத்துக்கு அவரே கார்ட்டூன் வரைந்த காலங்களும் உண்டு. கார்ட்டூன் நன்றாக இல்லை என அவருடைய நண்பர்கள் சுட்டிக்காட்ட, `இனி என் வாழ்வில் ஒருபோதும் கார்ட்டூன் வரைய மாட்டேன்' என்று அறிவித்த 'வரலாறும்' உண்டு.

மாற்றுக்கட்சிக்காரர்களின் கருத்துகளுக்கு மறுப்பு சொல்வதற்காகவும் அறிக்கை வெளியிடுவதற்காகவும் இதற்கு முன் வந்த அரசு ஆணைகள், தலைவர்கள் சொன்ன கருத்துகள் போன்றவற்றை அந்த அறிக்கை வந்த காலகட்டத்தைச் சொல்லி தேடி எடுக்கச் சொல்வார். பெரும்பாலும் அந்தச் செய்தி வெளியான நாளையே நினைவு வைத்துச் சொல்வார். நான் பணியாற்றிய காலகட்டத்தில் குணசேகரன் என்கிற நூலகர் அங்கே இருந்தார். 'எப்படித்தான் தலைவர் நினைவுவைத்திருக்கிறாரோ?' என அவர் பிரமிப்பார். சில நேரங்களில் அந்தச் செய்தி வெளியான மாதத்தைக் குறிப்பிடுவார். எப்படி இருப்பினும் அவர்  தமிழக அரசியலின் ஒரு கூகிள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

சில சமயங்களில் முரசொலி எட்டுப் பக்க ஏடாக இருக்கும். சில நாள்களிலோ ஆறு பக்க ஏடு. `உடன்பிறப்பே' எனத் தொடங்கும் அவருடைய கடிதத்துக்காக அந்த நாளில் அவருக்கு மூன்றாயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்பட்டது. அது முழுத் தகுதி வாய்ந்த சன்மானம்தான். அவர் கடிதம் எழுதும் நாளில் உடன்பிறப்புகள் நாளிதழ் வாங்குவது அதிகமாகவே இருக்கும். கடிதம் இல்லாத நாளில்  முதல் பக்கத்தில் அவருடைய பேச்சு இடம்பெறும். சமயங்களில் உடன்பிறப்புக்கான கடிதம், கருணாநிதியின் பேச்சு இரண்டும்கூட இடம்பெறும். அப்போதெல்லாம் 'முரசொலி' வாங்கும்  உடன்பிறப்புகளின் உற்சாகம் இரட்டிப்பாகிவிடும்.

அவர் எழுதித்தரும் கடிதமோ, கேள்வி-பதிலோ கம்போஸிங் பணிக்காக வரும். அடித்தல் திருத்தல் இல்லாத எழுத்து. ஒவ்வோர் எழுத்தையும் வரைகிறாரோ என ஆச்சர்யமாக இருக்கும். நூறு பக்கங்கள் எழுதினாலும் அதே எழுத்துதான். கிறுக்கித்தரும் வழக்கம் இல்லை. சட்டசபைக்குச் செல்லவேண்டியதோ, கவியரங்கத்துக்குச் செல்லவேண்டியதோ, மாநாடுகளை ஒருங்கிணைக்கவேண்டியதோ, வழக்குகளுக்காக நீதிமன்றம் செல்லவேண்டியதோ, திரைக்கதை எழுதவேண்டியதோ அவருக்கு நெருக்கடியாக இருக்கும். ஆனாலும் அவர் உடன்பிறப்புகளுக்காக கரிகாலன் பதில்கள் வழங்குவதையோ, கடிதம் எழுதுவதையோ நிறுத்தியதில்லை.
தன்னை `பத்திரிகையாளர்' என முழுமையாக நம்புகிற ஒருவரால்தான் அப்படி ஓய்வில்லாமல் எழுத முடியும்.